LATEST NEWS
சிறையில் இருந்து வந்ததும் நேர்ந்த கொடூரம்…!காலை நேரத்தில் ரத்த ஆறு ஓடிய மதுராந்தகம் மேம்பாலம்…! அரசு பள்ளி முன்பு வாலிபருக்கு விழுந்த அரிவாள் வெட்டு.. மதுராந்தகத்தில் பழிக்கு பழி…!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி வாயிலின் முன்பு பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன்கள் கோபி, குபேந்திரன் ஆகியோருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தரின் மகன்கள் தமிழரசன், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கும் இடையே கடந்த மாதம் கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது தமிழரசனுக்கு ஆதரவாக அவரது மைத்துனரான சென்னையைச் சேர்ந்த சுமன் என்பவர் தலையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கோபியின் சகோதரரான குபேந்திரன், ஆத்திரமடைந்து சுமனை மரக்கட்டையால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுமன் சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கோபி மற்றும் குபேந்திரன் ஆகிய இருவரையும் மதுராந்தகம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அண்மையில் சுமன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அதே வேளையில், சிறையில் இருந்த கோபியும் குபேந்திரனும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
ஜாமீனில் வெளிவந்த இருவரையும் பழிவாங்கும் நோக்கத்தில், சுமன் நேற்று நேத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், கோபியும் குபேந்திரனும் அங்கு இல்லாததால் அவர்களைத் தேடிவிட்டு, மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்று இரவு தங்கியுள்ளார். இன்று காலை சுமன் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்வதற்காகக் கருங்குழி அடுத்த ரயில்வே மேம்பாலம் மற்றும் அரசுப் பள்ளி வாயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின் தொடர்ந்த சந்தோஷ் கண்ணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் தலை, கை, கால் எனப் பல இடங்களில் படுகாயமடைந்த சுமன், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், காயமடைந்த சுமனை மீட்டுச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இந்தத் தாக்குதல் பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய குற்றவாளிகளையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.
