5 வருட நம்பிக்கை… கடைசியில் வைத்த பெரிய வேட்டு…நடிகை ரவீனா டாண்டன் சகோதரர் வீட்டில் ரூ.25 லட்சம் திருட்டு… போலீசில் மாட்டிய ‘ராஷி சாப்ரியா…’ – cinefeeds
Connect with us

CINEMA

5 வருட நம்பிக்கை… கடைசியில் வைத்த பெரிய வேட்டு…நடிகை ரவீனா டாண்டன் சகோதரர் வீட்டில் ரூ.25 லட்சம் திருட்டு… போலீசில் மாட்டிய ‘ராஷி சாப்ரியா…’

Published

on

முன்னணி நட்சத்திரங்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன்றோரின் வீடுகளில் பணிப்பெண்கள் நகைகளைத் திருடி மாட்டிய சம்பவங்களைப் போல, தற்போது பாலிவுட் திரையுலகில் ஒரு பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘ஆளவந்தான்’, ‘கேஜிஎஃப் 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான முன்னணி நடிகை ரவீனா டாண்டனின் சகோதரர் ராஜீவ் டாண்டன் இல்லத்தில் இருந்து சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைத் திருடிய வழக்கில், ராஷி சாப்ரியா (47) என்ற பெண்மணியை ஜூஹு போலீஸார் சமீபத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ராஷி சாப்ரியா, ரவீனாவின் தாயார் வீனா டாண்டனைப் பராமரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவர் மற்றும் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் டாண்டன் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகி வந்த சாப்ரியாவுக்கு, அவர்களது வீட்டிற்குள் எவ்விதத் தடையுமின்றிச் சென்று வர அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அவர், குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்று இந்தத் துணிகரத் திருட்டில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் குடும்பத்தினர் தங்களது வீட்டு லாக்கரை ஆய்வு செய்தபோது, அது உடைக்கப்பட்டு தங்கம், வைர நகைகள் மற்றும் இரண்டு விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ராஜீவ் டாண்டன் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியபோது, சாப்ரியா தனது திருட்டை ஒப்புக்கொண்டு இரண்டு கைக்கடிகாரங்களை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார்.

Advertisement

மற்ற நகைகளைத் தனது கூட்டாளியான ஜகதீஷ் என்பவரிடம் கொடுத்துவிட்டதாகக் கூறிய சாப்ரியா, பலமுறை கோரியும் அவற்றை மீட்டுத் தரவில்லை. அதுமட்டுமன்றி, நகைகளைக் கேட்டுத் தொந்தரவு செய்தால், போலீஸ் தகவல் தொடர்பாளர் என்று கூறிக்கொள்ளும் தனது கூட்டாளி மூலமாக ராஜீவ் டாண்டனைப் பொய்யான போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜீவ் டாண்டன் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த சாப்ரியாவை மே 21 அன்று போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மே 29 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, நகைகளை மீட்கும் பொருட்டு ஜூஹு காவல்துறையினர் மேல் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in