LATEST NEWS
மனுஷனா இவன்..? 12-வது மாடியில் இருந்து பூனையை கீழே தள்ளிய கொடூரம்..பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் உள்ள ‘ராயல் ஃபுளோரா ஃபேஸ் 2’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த ஜூலை 26-ஆம் தேதி அதிகாலை சுமார் 5:45 மணியளவில், நீல நிற ஃபனியன் மற்றும் அரைகால் சட்டை அணிந்த நபர் ஒருவர் 12-வது மாடி நடைபாதையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கைப்பிடிச் சுவரில் அமைதியாக அமர்ந்திருந்த ஒரு தெருப்பூனையை, அந்த நபர் எந்தக் காரணமும் இன்றி கொடூரமாக கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த நபர் பூனையை கீழே தள்ளிவிட்ட பிறகு, அது கீழே விழுவதைப் பார்த்துவிட்டு எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக அங்கிருந்து நடந்து சென்றுள்ளார். 12-வது மாடியிலிருந்து கீழே விழுந்ததால், அந்தப் பூனை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சியை ‘யஷ் சேகல்’ என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இக்காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விலங்குகள் மீதான இந்த எல்லை மீறிய கொடூரத்தைக் கண்டு கொதித்தெழுந்த நெட்டிசன்கள், அந்த நபருக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அப்பாவி விலங்குக்குத் தீங்கிழைத்த அந்த நபரை உடனடியாகக் கைது செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
