LATEST NEWS
“மருத்துவமனை சூப்பர்… ஆனா அப்புறம் தான் சிக்கலே..!” மும்பை பிரசவ அனுபவத்தை உடைத்துப் பேசிய வெளிநாட்டுப் பெண்..!!
நெதர்லாந்தைச் சேர்ந்த இணையதள உள்ளடக்கப் படைப்பாளரான இவானா, இந்தியாவில் வசித்து வரும் சூழலில், மும்பையில் தனது குழந்தையைப் பெற்றெடுத்த அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது சொந்த நாடான நெதர்லாந்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் மருத்துவ முறை முற்றிலும் வேறுபட்டிருப்பதை பிரசவத்தின்போதே தான் உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நெதர்லாந்தில் பிரசவத்தின் போது மருந்துகள் பயன்பாடு குறைவாகவே இருக்கும் என்றும், குழந்தை பிறந்தவுடன் விரைவில் மருத்துவமனையிலிருந்து அனுப்பி விடுவார்கள் என்றும் கூறிய அவர், மும்பையில் மருந்துகள் இல்லாத இயல்பான பிரசவத்திற்குத் தான் உறுதியாக இருக்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், குழந்தை பிறந்த பிறகு மருத்துவமனையில் தனக்கு அளிக்கப்பட்ட கனிவான பராமரிப்பும் வசதிகளும் மிகவும் பிடித்திருந்ததாக அவர் பாராட்டியுள்ளார்.
ஆனால், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகு அவருக்குப் பல சவால்கள் காத்திருந்தன. உறவினர்கள் யாரும் அருகில் இல்லாத சூழலிலும், சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்ததாலும் உதவிக்கு யாரையும் வரவழைக்க முடியாமல் அவர் தனிமையில் தவித்துள்ளார். அதே காலகட்டத்தில் மும்பையில் வெயிலின் தாக்கம் 40 டிகிரியைத் தாண்டி கொளுத்தியதால், பிறந்த குழந்தையுடன் வெளியே செல்லவும், கட்டிட வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் கூட அவர் பயந்துள்ளார். அதோடு மும்பையின் கடுமையான போக்குவரத்து நெரிசலும் சேர்ந்துகொள்ள, இந்த அனுபவம் அவரை முற்றிலும் தனிமைப்படுத்தியது. இந்தச் சூழலில், கணவர் அலுவலகம் சென்ற நாட்களில் அவர் வளர்த்த ‘பாம்பி’ என்ற நாய் மட்டுமே அவருக்கு பெரிய மன அமைதியையும் ஆறுதலையும் அளித்துள்ளது.
https://www.instagram.com/reel/DbCzwULz1Bs/?utm_source=ig_web_button_share_sheet
குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆனபோது மனதளவில் மிகவும் சோர்வடைந்த இவானா, மும்பையின் நெரிசலில் இருந்து விடுபட்டுச் சற்று மூச்சுவிடத் தன் சொந்த நாடான நெதர்லாந்திற்குப் பயணமானார். இவரது இந்தத் தனிப்பட்ட அனுபவப் பதிவிற்கு சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. சிலர் இவரது சூழ்நிலையைத் தங்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்; இன்னும் சிலர் நெதர்லாந்தில் பிரசவம் பார்க்கவிருக்கும் தங்களது நிலையை இதனுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். மேலும் பல பயனர்கள், தனது உண்மையான அனுபவத்தைப் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதற்காக இவானாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
