LATEST NEWS
முதல் கல்யாணத்த மறைச்சு 2வது கல்யாணம்.. “பொண்டாட்டிக்கு காசு தர முடியாது”னு சொன்ன கணவர்… அலகாபாத் ஐகோர்ட் கொடுத்த அதிரடி ஷாக்..!!
தன் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி, அந்தத் திருமணம் நடைமுறையில் இருந்த விஷயத்தை அறியாமல், அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கும் ஜீவனாம்சம் பெற முழு உரிமை உண்டு என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. தன் முதல் திருமணத்தை மறைத்து, ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட கணவர், சட்டம் 125 CrPC-ன் கீழ் அந்தத் திருமணம் செல்லாது (Void) என்ற காரணத்தைக் காட்டி ஜீவனாம்சம் தருவதைத் தவிர்க்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த வழக்கின் பின்னணியில், மனோஜ் குமார் என்ற அரசு ஊழியருக்கும் மோனிகா என்பவருக்கும் கடந்த 2016 டிசம்பரில் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. ஆனால், மனோஜின் முதல் திருமணம் 2017 நவம்பரில்தான் பரஸ்பர விவாகரத்து மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், தனது திருமணம் செல்லாது என்பதால் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்ற கணவரின் வாதத்தை மதுரா குடும்ப நீதிமன்றம் நிராகரித்து, மாதம் 6,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்துக் கணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கரிமா பிரசாத், ஒரு நபர் தான் செய்த தவற்றின் மூலம் ஆதாயம் அடைந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சட்டப்பூர்வ வாழ்வாதாரத்தை மறுக்க அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கணவர் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கும் அரசு ஊழியர் என்பதால், குடும்ப நீதிமன்றம் விதித்த 6,000 ரூபாய் ஜீவனாம்சம் போதாது என்ற மனைவியின் மனுவை ஏற்று, அந்தத் தொகையை உயர்த்தி வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
