LATEST NEWS
“தூய்மைப் பணியாளருக்கு ரூ.16,000… படிச்ச எனக்கு ரூ.12,000-ஆ?” “வேலையைத் தூக்கி எறிஞ்சிட்டு சிரிச்சிகிட்டே வந்துட்டேன்” – இணையத்தில் விவாதத்தைக் கிளப்பிய பெண்ணின் வீடியோ..!!
தனியார் மருத்துவமனை ஒன்றில் ஃபார்மசிஸ்ட் பணிக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்ற ஆஷா என்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சியளிக்கும் அனுபவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்கு முன்பாக, அங்கிருந்த தூய்மைப் பணியாளர் பெண்ணிடம் ஆஷா பேசியபோது, அவருக்கு மாதம் ₹16,000 சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரிந்துள்ளது. தூய்மைப் பணியாளருக்கே ₹16,000 சம்பளம் கொடுக்கப்படும்போது, சிறப்புப் படிப்பு படித்த ஃபார்மசிஸ்ட் பணிக்குக் குறைந்தது ₹18,000 முதல் ₹20,000 வரையாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஆஷா நேர்முகத் தேர்வுக்குள் சென்றுள்ளார்.
ஆனால், மனிதவள அதிகாரியைச் சந்தித்தபோது ஆஷாவுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஃபார்மசி துறையில் அவர் புதியவர் என்பதைக் காரணம் காட்டி, தினமும் 10 மணி நேர வேலைக்கு ₹12,000 முதல் ₹14,000 மட்டுமே அடிப்படைச் சம்பளமாகத் தரப்படும் என்று எச்.ஆர் கூறியுள்ளார். சுகாதாரத் துறையில் தனக்கு ஏற்கனவே 4 ஆண்டுகள் பணி அனுபவம் இருந்தபோதிலும், ஃபார்மசிஸ்ட் பணிக்கு இந்த அளவுக்குக் குறைவான ஊதியம் பேசப்படுவதைக் கேட்டு வியப்படைந்த ஆஷா, அந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ளாமல் சிரித்தபடியே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை ஆஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தூய்மைப் பணியாளரின் பல வருட பணி அனுபவத்தால் அவருக்கு ₹16,000 சம்பளம் வழங்கப்படலாம் எனச் சிலர் சுட்டிக்காட்டிய நிலையில், தாம் எந்தப் பணியையும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும், தகுதியான மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த தொடக்கச் சம்பளத்தைச் சுட்டிக்காட்டவே முயன்றேன் என்றும் ஆஷா விளக்கமளித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து பல மருத்துவர்களும் சுகாதாரத் துறை ஊழியர்களும் தங்கள் ஆரம்பகாலக் குறைந்த சம்பள அனுபவங்களைப் பகிர்ந்து, மருத்துவத் துறையில் நிலவும் நியாயமற்ற ஊதிய முறை குறித்துக் குரல் கொடுத்து வருகின்றனர். சிறப்புப் படிப்பு முடித்தவர்களுக்கே தகுதிக்கேற்ற ஊதியம் மறுக்கப்படும் சூழல், தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
