LATEST NEWS
அண்டார்டிகாவில் சீனா செய்த ‘மெகா தில்லாலங்கடி’! உறைந்து போன உலக நாடுகள்! 3,413 மீட்டர் ஆழத்தில் உறைந்து கிடக்கும் மர்மம்.. சீனாவின் அடுத்த மாஸ்டர் பிளான்…!
அண்டார்டிகாவின் தடிமனான பனிப்பரப்புக்குக் கீழே, பல மில்லியன் ஆண்டுகளாக உலகத் தொடர்பே இல்லாமல் மூடிக்கிடந்த ஒரு பிரம்மாண்ட ஏரியைத் துளைத்து சீன ஆய்வாளர்கள் குழு உலகளாவிய சாதனை படைத்துள்ளது. சீனாவின் 42-வது அண்டார்டிகா ஆராய்ச்சிப் படையினர், சுமார் 3,413 மீட்டர் (3.4 கிலோமீட்டர்) ஆழம் வரை பனிப்பாறைகளைத் துளைத்து இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு உலக அளவில் பனிப்பாறைகளைத் துளைத்த அதிகபட்ச ஆழம் 2,540 மீட்டராக மட்டுமே இருந்த நிலையில், தற்போது சீனா அதனை விட 900 மீட்டர் கூடுதலாகத் துளைத்துள்ளது. சீனாவின் இயற்கை வள அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பம் மூலம், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவின் ஒட்டுமொத்த பனிப்பகுதிகளையும் மிக எளிதாகத் துளைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த அசாதாரண ஆய்வு அண்டார்டிகாவின் கிழக்கு உட்பகுதியில் உள்ள டைஷான்’ ஆய்வு’ மையத்திலிருந்து 120 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ‘கிலின்’ நிலத்தடி ஏரியில் மேற்கொள்ளப்பட்டது. பல மில்லியன் ஆண்டுகளாகச் சூரிய வெளிச்சமோ, பூமியின் வளிமண்டலக் காற்றோ அண்டாத இந்த ஏரி, அண்டார்டிகாவின் இரண்டாவது மிகப்பெரிய நிலத்தடி ஏரியாகும். கடுமையான பனி அழுத்தம் மற்றும் நிரந்தர இருளுக்குள் வாழப் பழகிய விசித்திரமான நுண்ணுயிரிகள் இந்த ஏரிக்குள் வாழக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இங்குள்ள நீரின் வேதியியல் பண்புகள் மற்றும் படுக்கை படிமங்களை ஆராய்வதன் மூலம் பூமியின் பழங்காலக் காலநிலை மாற்றங்களைத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்பதோடு, சூரிய குடும்பத்தில் உள்ள இதர பனி கிரகங்களில் உயிர்கள் எவ்வாறு வாழ முடியும் என்பதை ஆராயவும் இது ஒரு புதிய சாளரத்தைத் திறந்து கொடுத்துள்ளது.
இவ்வளவு ஆழமான ஏரியைத் துளைக்கும் போது வெளிப்புறப் மாசுபாடோ அல்லது இயந்திரங்களின் எரிபொருட்களோ உள்ளே புகுந்தால், பல மில்லியன் ஆண்டுகள் தூய்மையாக இருக்கும் அந்த ஏரியின் சூழல் அடியோடு கெட்டுவிடும் அபாயம் இருந்தது. இதனைத் தவிர்க்கச் சீன விஞ்ஞானிகள் முற்றிலும் ஒரு தூய்மையான (‘க்ளீன்’) உத்தியைக் கையாண்டனர். அவர்கள் மேற்பரப்பில் உள்ள இயந்திரங்கள் மூலம், அந்தந்தப் பகுதியில் இருந்த பனிக்கட்டிகளையே உருக்கி, அந்த வெந்நீரைக் கடுமையான அழுத்தத்தில் நீண்ட குழாய்கள் மூலம் கீழே பாய்ச்சினர். அந்த வெப்பம் பனியைத் தொட்ட உடனே உருகி, சுத்தமான ஒரு மெகா துளையை உருவாக்கியது. எவ்வித வெளிப்புறக் கிருமிகளும் இன்றி, மிக வேகமாகவும் தூய்மையாகவும் அண்டார்டிகா நிலத்தடி ஏரியின் நீர் மற்றும் படிம மாதிரிகளை எடுக்க இந்த அதிநவீன வெந்நீர் உத்தி வழிவகை செய்துள்ளது.
சீன அறிவியல் அகாடமியின் புவி இயற்பியல் ஆராய்ச்சியாளர் லு காய் இதுகுறித்துக் கூறுகையில், “இந்த ஆழமான பனிப்பாறைகளின் உள்ளே பல லட்சம் ஆண்டுகால ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள் உறைந்து கிடக்கின்றன; கடந்த காலத்தின் உலகளாவிய பனி அளவு, வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பநிலை மாற்றங்களைக் கண்டறிய இவை மிக முக்கியமானவை” என்று குறிப்பிட்டுள்ளார். வெற்றிகரமாகத் துளையிடும் சோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ஏரிக்குள் பிரத்யேகக் கருவிகளை இறக்கி எவ்வித மாசுபாடும் இன்றி மாதிரிகளைச் சேகரிக்கும் அடுத்தகட்ட ஆபரேஷனுக்குச் சீனா தயாராகி வருகிறது. புவியின் வரலாற்றை மாற்றியமைக்கக்கூடிய இந்தத் தொழில்நுட்பங்களையும், இதிலிருந்து பெறப்படும் தரவுகளையும் உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் சீனா சம்மதித்துள்ளது உலக அறிவியல் அரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
