LATEST NEWS
“எடப்பாடி பழனிசாமி உண்மையான அதிமுககாரரா…? திமுக கூட டீல் பேசினதே எடப்பாடி தான்… ரகசியக் குதிரை பேரத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் செங்கோட்டையன்….!!
பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஜெயக்குமார், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கட்சி ஆரம்பித்த இரு வருடங்களிலேயே 38% வாக்குகளைப் பெற்று ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக மக்கள் விரும்பும் ஆட்சியை நடத்தி வருவதாகப் பெருமிதம் கொண்டார்.
தவெக மீது குதிரை பேரக் குற்றச்சாட்டைச் சுமத்தும் எடப்பாடி பழனிசாமி தான், திமுகவுடன் ரகசியக் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரத் துடித்து முதலில் குதிரை பேரத்தை ஆரம்பித்தார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில்கூட அதிமுக – திமுக கூட்டணி அமைத்ததே இல்லை என்றும், ஜெயலலிதாவைச் சிறையில் அடைத்த திமுகவுடன் கைக்கோர்க்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி உண்மையான அதிமுககாரர் தானா என்ற ஐயமும் தங்களுக்கு எழுந்துள்ளதாக அவர் சாடினார்.
திமுகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தலைமை ஆர்வம் காட்டியதே ஜெயக்குமார் போன்ற விசுவாசமான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய முக்கியக் காரணம் என்று செங்கோட்டையன் விளக்கமளித்தார். தவெக எந்தவொரு குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை என்றும், பணநாயகத்தை எதிர்த்துத் தனித்து நின்று நேர்மையாகப் பெற்றுக்கொண்ட வெற்றி இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியினர் எழுப்பும் வீணான புகார்களுக்குத் தானும், அமைச்சர் விஜய் பாலாஜியும் சட்டமன்றத்தில் உரிய பதிலடி கொடுப்போம் என்று கூறிய அவர், ஈரோடு மாவட்ட அமைச்சர்களான தாங்கள் இருவரும் இணைந்து இப்பகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து நற்பணிகளையும் செய்வோம் என்றார். மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் கடுமையான எதிர்ப்பை முதலமைச்சர் ஜோசப் விஜய் மத்திய அரசிடம் ஏற்கனவே முறைப்படி தெரிவித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
