LATEST NEWS
“இரண்டே ஆண்டுகளில் மெகா சாதனை…” த.வெ.க-வின் பிரம்மாண்ட வெற்றியை பாராட்டி ப.சிதம்பரம் நெகிழ்ச்சி….!!
தமிழக வெற்றிக் கழகத்தின் அபார வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கட்டிலில் ஏறியிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை என்று பாராட்டியுள்ளார். இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் நகர்ப்புற மக்களின் பலத்த ஆதரவோடு சுமார் 35 சதவீத வாக்குகளைப் பெற்று, ஒவ்வொரு குடும்பத்திலும் த.வெ.க ஒரு வாக்கைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசில் 31 அமைச்சர்களும், 101 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது முதல் அனுபவத்தைக் கையாள்வதால் அவர்களுக்கு மக்கள் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் கல்வித் திட்டங்களை இந்த அரசு முன்னெடுக்க வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து தி.மு.க விலகுவதாக மு.க.ஸ்டாலின் தன்னிடம் கூறவில்லை என்றும், மாநில உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் வரை புதிய அரசை ஆதரிப்பதில் தவறில்லை என கம்யூனிஸ்ட் தலைவர்களும் கருதுவதாகக் கூறினார்.
தமிழக மக்கள் தற்போதைய சூழலில் மறுதேர்தலை விரும்பவில்லை என்றும், அப்படித் தேர்தல் வந்தால் பா.ஜ.க பின்புற வழியாகக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி அரியணையில் அமர்ந்துவிடும் என்றும் எச்சரித்தார். இறுதியாக, தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி அமைக்க முயல்வதாகக் கூறப்படும் செய்திகள் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும், மேகேதாட்டு போன்ற நதிநீர் விவகாரங்களில் தமிழகத்தின் நிலைப்பாட்டிற்குக் காங்கிரஸ் என்றும் துணை நிற்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
