LATEST NEWS
எங்களுக்கு ஒன்னுனா அண்ணன் வருவார்…அரசியல் அரியணையை அசைக்கும் ‘திருப்பாச்சி’ ஃபார்முலா…‘சிங்கப்பெண்கள் படை டூ அண்ணன் சீர்’.. பெண்களின் அண்ணனாக மாறி தவெக-வை ஆட்சியில் அமரவைத்த விஜய் அண்ணா…!
திரைத்துறையில் தொடங்கி இன்று அரசியல் அரியணை ஏறியிருப்பது வரை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்யின் பின்னால் பெண்களின் பெரும்படை நின்றுகொண்டிருக்கிறது. தமிழகப் பெண்கள் பலரும் விஜய்யை வெறும் ஒரு கமர்ஷியல் நடிகராகப் பார்க்காமல், தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அரணாக நிற்கும் ‘அண்ணனாகவே’ தங்களது நெஞ்சங்களில் ஆழமாகப் பதித்துள்ளனர். ஆரம்பகாலத்தில் ஒருதலைக் காதல், காதல் தோல்வி போன்ற கதைகளில் நடித்து இளம்பெண்களின் இதயங்களைக் கவர்ந்த விஜய், பின்னர் கமர்ஷியல் பாதையைத் தேர்ந்தெடுத்தபோது பெண்களிடம் அண்ணன் என்ற இடத்தை பிடிக்கும் உத்தியை மிகச் சரியாகக் கையாண்டார். அதற்குத் தீனி போடும் விதமாக இயக்குநர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘திருப்பாச்சி’ திரைப்படம், அவரது திரைப்பயணத்திலும் தனிப்பட்ட பிம்ப உருவாக்கத்திலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான ‘திருப்பாச்சி’ திரைப்படத்தில் தங்கைக்காக விஜய் காட்டும் பாசமும், அவளுக்குப் பிரச்சினை வரும்போது எடுக்கும் அதிரடி அவதாரமும் அன்றைய காலகட்டத்தில் பெண் ரசிகைகளிடம் ஒரு உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘பாசமலர்’ சிவாஜி கணேசன் தங்கைக்காக அழுது உருகினார் என்றால், ‘திருப்பாச்சி’ விஜய் தங்கைக்கு நடக்கும் அநியாயங்களை வன்முறை கொண்டு அழித்தார் என்ற புதிய பிம்பம் விதைக்கப்பட்டது. தங்கைக்காகப் போராடும் அண்ணனாக விஜய் திரையில் காட்டிய எக்ஸ்ட்ரீம் எமோஷனல் காட்சிகள், ‘நமக்கும் இப்படி ஒரு அண்ணன் இல்லையே’ என்று பல பெண்களை ஏங்க வைத்தது. இந்த ஃபார்முலாவைத் தற்காலிகமாக விட்டுவிடாமல், பின்னாளில் வெளியான ‘வேலாயுதம்’, ‘பிகில்’ போன்ற படங்களிலும் விஜய் மிகக் கவனமாகத் தொடர்ந்தார்.
சினிமாவில் விதைக்கப்பட்ட இந்த அண்ணன் பிம்பம்தான், இன்று தவெக கட்சியின் அரசியல் பலமாகவும் மாறியிருக்கிறது. திமுகவினருக்கு எப்படிப் பேரறிஞர் அண்ணாவோ, அப்படித் தவெகவினருக்கு ‘விஜய் அண்ணா’ என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. அரசியலுக்கு வந்த பிறகும் ‘சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடி படை’, ‘அண்ணன் சீர்’, ‘தாய்மாமன் சீர்’ எனப் பெண்களைக் கவரும் திட்டங்கள் மூலம் தனது அண்ணன் பிம்பத்திற்கான ஆணியை அவர் மேலும் இறுக்கியுள்ளார். விஜய் மீதான இந்த வெறித்தனமான பாசத்தையும் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு இப்போது முதலமைச்சர் விஜய்க்கு உள்ளது. திரையில் தங்கைகளுக்குத் துணையாக நின்றது போல், நிஜ வாழ்விலும் தமிழகப் பெண்களின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் அவர் துணையாக இருப்பாரா என்பதை இனிவரும் காலமே தீர்மானிக்கும்.
