CRIME
தூத்துக்குடி லாக் அப் மரணத்தில் திடீர் திருப்பம்…! “சிறைக்குள்ளேயே மயங்கி விழுந்தார் அருணாசலம்” காவல் நிலையத்தில் கைதி மயங்கி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு..!!
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த 29 வயது இளைஞரான அருணாச்சலம், லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலை 18-ஆம் தேதி (காவல்துறை தரப்பில் ஜூலை 17), சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசாரால் விசாரணைக்காக அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்தபோது அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்ததால், அவர் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது தனது நண்பர்களிடம், காவல் நிலையத்தில் வைத்து மூன்று போலீசார் தன்னை கொடூரமாகத் தாக்கியதாக அருணாச்சலம் தெரிவித்தார். இந்த வாக்குமூல வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அருணாச்சலத்தின் மரண செய்தி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைந்து, போலீசார் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், அருணாச்சலம் சிறைக்கம்பிக்கு பின்னால் நின்றிருந்தபோது அவராகவே நிலைதடுமாறி மயங்கி விழுந்ததாகவும், இது லாக்-அப் மரணம் அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
