LATEST NEWS
ஐயோ நான் இதை எங்க போயி சொல்லுவேன்..? உலகத்திலேயே இப்படி ஒரு அமைச்சரைப் பார்க்க முடியுமா? தலையில் அடித்துக்கொண்ட நயினார் நாகேந்திரன்..!!
தமிழக முதல்வரான பிறகு நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு சென்சார் தடைகளைக் கடந்து வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமைச்சரவையில் உள்ள அவரது முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் படம் பார்க்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இத்திரைப்படத்தைக் காண்பதற்காக அமைச்சர் விக்னேஷ், முதல்வர் விஜய்யிடம் 3 மணி நேரம் பணி விடுப்பு கேட்டதாக எழுந்த செய்தி அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் புயலைக் கிளப்பியது.
இந்த விடுப்பு விவகாரம் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அமைச்சர் விக்னேஷ் இந்தச் செய்தியை உறுதியாக மறுத்துள்ளார். தாம் யாரிடமும் விடுப்பு கேட்கவில்லை என்றும், அப்படி விடுப்பு கேட்டதாக ஆதாரம் இருந்தால் அதை வெளிப்படையாகக் காட்டட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளதால் இச்சம்பவம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
இச்சம்பவம் குறித்துச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விரக்தியுடன் தலையில் கைவைத்தபடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “உலகத்திலேயே இப்படி ஒரு அமைச்சரைப் பார்க்க முடியுமா? முதல்வர் நடித்த படத்தைப் பார்க்க அமைச்சர்கள் லீவு கேட்டுப் போனால் என்ன சொல்வது? அவரை லீவு கடிதமே எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள்” என்று கடுமையாக எள்ளல் தொனியில் சாடினார்.
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் கட்சி முகவரியின்றி இயங்குவதாக விமர்சித்தார். பல கோடி ரூபாய் கொடுத்து மருத்துவராகுபவர்களால் முறையான சிகிச்சை அளிக்க முடியாது என்பதால் நீட் தேர்வு மிகவும் அவசியம் என்று வலியுறுத்திய அவர், பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும், ராகுல் காந்தியின் அரசியலைக் கண்டித்துத் தமிழக காங்கிரஸ் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
