LATEST NEWS
கணவரை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…தவெக பிரமுகரின் அத்துமீறல்… நள்ளிரவில் பெண் வீட்டின் கதவைத் தட்டிய வேம்புலி…திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் வித்தியாசமே இல்லையா? அண்ணாமலையின் ஒற்றைப் பதிவு கிளப்பிய அரசியல் புயல்…!
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த, கணவரை இழந்த பெண்ணான கீதா, அங்குள்ள மகளிர் உடற்பயிற்சி மையத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆலந்தூர் வடக்கு பகுதி தமிழக வெற்றி கழக (தவெக) செயலாளராக இருந்த வேம்புலி என்பவர், கீதா தொடர்ந்து அந்தப் பணியில் நீடிக்க வேண்டுமென்றால் தனக்கு இணக்கமாக இருக்க வேண்டும் எனக் கூறி பல்வேறு தொல்லைகளைக் கொடுத்துள்ளார். மேலும், இரவு நேரங்களில் கீதா தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கீதா, பரங்கிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தவெக கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி வேம்புலி மீது அதிரடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை புறநகர் மாவட்ட தவெக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் வேம்புலி வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்; அவரது அடிப்படை உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்படுகிறது” என அறிவித்துள்ளார். மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதற்கு பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போதைய தவெக ஆட்சியிலும் குறையவில்லை என்று சாடியுள்ள அண்ணாமலை, சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக் கூடாது என்றும், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்தியுள்ளார்.
