LATEST NEWS
சிறுவனை கொன்று தாயை சிறைபிடித்த ஓனர்… 4 மாதமாக சித்திரவதை அனுபவித்து…. கோழி தகராறால் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண், தனது மூன்று பிள்ளைகளுடன் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான முருக்கம்பட்டு கோழிப்பண்ணையில் கடந்த ஆறு மாதங்களாக தங்கி வேலை செய்து வந்தார். அங்கு பண்ணை உரிமையாளர் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் வினோத் ஆகியோர், பண்ணையில் கோழிகள் குறைந்ததற்கும் பக்கத்து நிலத்து ஆடுகளால் ஏற்பட்ட தகராறுக்கும் வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷ் (15) தான் காரணம் எனக் கூறி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், கொலையை மறைப்பதற்காகச் சிறுவனின் உடலை பண்ணை வளாகத்திற்குள்ளேயே குழி தோண்டி ரகசியமாகப் புதைத்துள்ளனர். மேலும், இந்த விபரத்தை வெளியே சொன்னால் குடும்பத்தையே தீர்த்துக்கட்டி விடுவோம் என மிரட்டி, வெண்ணிலாவையும் அவரது மற்ற இரு குழந்தைகளையும் கடந்த நான்கு மாதங்களாக அங்கேயே சட்டவிரோதமாகச் சிறைபிடித்து வைத்துள்ளனர்.
சமீபத்தில் அங்கிருந்து தப்பிய வெண்ணிலா, திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த பாலமுருகன், அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் வினோத் உள்ளிட்ட நான்கு பேரை அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட நீதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மருத்துவக் குழுவினரால் அங்கேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
