LATEST NEWS
“நெஞ்சு வலிக்குது டாக்டர்..!”அலறித் துடித்த தாயின் கதறலைக் காதில் வாங்காத மருத்துவர்கள்… பிரசவித்த சில மணி நேரங்களிலேயே தாய் எடுத்த கொடூர முடிவு..! நல்கொண்டாவில் நடந்த நெஞ்சைப் பிளக்கும் சோகம்..!!
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா என்ற பெண், அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. முனுகோடு மண்டலத்தைச் சேர்ந்த காகதிமாமிடி கிராமத்தைச் சேர்ந்த மம்தாவுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி பிரசவத்திற்காக நல்கொண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு 10:38 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, குழந்தை தனி வார்டில் வைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தது. மம்தா குறிப்பிட்ட நேர இடைவெளியில் அங்கு சென்று குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து வந்தார். மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், அன்றிரவு மம்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நெஞ்சு கடுமையாக வலிப்பதாக மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு இருந்த மருத்துவர்களும் பணியாளர்களும் அவரது வலியையும் புகாரையும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
கடுமையான வலியால் அவதியுற்ற மம்தா, நள்ளிரவு 2 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த குடிநீர் தொட்டியின் ஸ்டாண்டில் தனது புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். படுக்கையில் மம்தாவைக் காணாததால் குடும்பத்தினர் தேடியபோது, நீர் தொட்டி ஸ்டாண்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே மம்தாவின் தற்கொலைக்குக் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
