LATEST NEWS
“அய்யோ பாவம்ப்பா…” பண்டிகைக்குச் சந்தோஷமா வீட்டுக்கு வந்த பொண்ணு.. போலி டாக்டர் போட்ட ஊசியால்… வாயில் நுரை தள்ளி மயங்கிய சிறுமி…கம்மமில் நடந்தது என்ன..?!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொனிஜேர்லா மண்டலத்திற்குட்பட்ட பஸ்வாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சல்லா ரமேஷ் என்பவரின் 14 வயது மகள் ஹேமஸ்ரீ, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். போனாலு பண்டிகையை முன்னிட்டு விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்த ஹேமஸ்ரீக்கு லேசான சளி மற்றும் இருமல் ஏற்பட்டது. விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்பட இருந்ததால், பெற்றோர் அவரைச் சிகிச்சைக்காகக் கிராமத்தில் உள்ள ஒரு போலி மருத்துவரிடம் (RMP) அழைத்துச் சென்றனர்.
அங்கு அந்த நபர் ஹேமஸ்ரீக்கு ஒரு ஊசி போட்ட பிறகு, இரண்டாவது ஊசியைச் செலுத்தியபோதே சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். அவரின் வாயில் இருந்து நுரை தள்ளியதோடு, மூச்சு விடவும் கடுமையாகச் சிரமப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரைச் சிகிச்சைக்காகக் கம்மமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சிறுமி இறந்தது தெரிந்ததும் அவருடன் மருத்துவமனைக்கு வந்த போலி மருத்துவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கம்மம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
