LATEST NEWS
பள்ளியா… சுடுகாடா…? 2 ஆண்டுகளில் 584 குழந்தைகள் பலி..! மகாராஷ்டிரா ஆசிரமப் பள்ளிகளில் நடப்பது என்ன..? திடுக்கிடும் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலப் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆசிரமப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கட்சிப்ரோலி மாவட்டத்தில் உள்ள ஜப்தலாய் ஆசிரமப் பள்ளியில் பாம்பு கடித்து 3 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து விழித்துக்கொண்ட பழங்குடியினர் நலத்துறை, மாநிலம் முழுவதிலும் உள்ள ஆசிரமப் பள்ளிகளின் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்தபோது, கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 584 மாணவர்கள் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் அரசு ஆசிரமப் பள்ளிகளில் 384 மாணவர்களும், அரசு உதவிபெறும் ஆசிரமப் பள்ளிகளில் 200 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.
மாணவர்களின் உயிரிழப்புக்கான முதன்மைச் சான்றுகளாக நோய்கள், விபத்துகள் மற்றும் பாம்புக்கடி போன்றவை அமைந்துள்ளன. அறிக்கை தரவுகளின்படி, கடுமையான நோய்களால் 273 மாணவர்களும், பல்வேறு விபத்துகளால் 228 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் 55 மாணவர்களும், விஷப்பாம்பு கடித்ததால் 28 மாணவர்களும் பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் சுமார் 88 சதவீத மரணங்கள் மாணவர்கள் விடுமுறை நாட்களுக்காகத் தங்கள் வீடுகளுக்குச் சென்றிருந்தபோதும், சுமார் 11 சதவீத மரணங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளும் நிகழ்ந்துள்ளன.
மாநிலத்தில் உள்ள 500 அரசு ஆசிரமப் பள்ளிகளில் 2,04,175 மாணவர்களும், 556 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2,61,836 மாணவர்களும் பயின்று வருகின்றனர். இதற்காக அரசு முறையே ரூ.2,303 கோடி மற்றும் ரூ.2,025 கோடி என ஆண்டுக்கு ரூ.4,300 கோடிக்கும் அதிகமாகச் செலவிட்ட போதிலும், மாணவர்களின் பாதுகாப்பும் அடிப்படை சுகாதார வசதிகளும் கவலைக்கிடமாகவே உள்ளன. மழைக்காலத்தில் பாம்புக்கடி ஆபத்து அதிகம் என்பதால், அனைத்து ஆசிரமப் பள்ளிகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றும், ஒடிசாவின் ‘கலிங்கா மாதிரி’ முறையைப் பின்பற்றி இப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் விஜய் வாக்மாரே தெரிவித்துள்ளார்.
