LATEST NEWS
விபத்தா..? தற்கொலையா..? IIT கரக்பூரை ஆட்டிப்படைக்கும் மரண பீதி..! 5 மாதங்களில் 7 பேர் பலியான அதிர்ச்சிப் பின்னணி… மாணவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கேள்விகள்..!!
மேற்கு வங்காளத்தில் உள்ள நாட்டின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி கரக்பூரில் 19 வயதான அங்கித் சர்மா என்ற மாணவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், இயந்திரவியல் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வியாழக்கிழமை மதியம் சுமார் 3:00 மணியளவில், வளாகத்தில் உள்ள ‘நாலந்தா கட்டிடத்தின்’ நான்காவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார். பலத்த சத்தம் கேட்டு ஓடிவந்த பாதுகாப்புப் பணியாளர்கள், இரத்த வெள்ளத்தில் கிடந்த அங்கித்தை உடனடியாக வளாகத்தில் உள்ள பி.சி. ராய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், கரக்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட ஹிஜ்லி காவல் சாவடி காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இயற்கை மாறா மரணம் என வழக்குப்பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்ரா பானோ நேரடியாகச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் ஊடகங்களிடம் கூறுகையில், “வளாகத்தினுள் மாணவர் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனால், அந்நேரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விபத்தா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று அனைத்துக் கோணங்களிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் ஐஐடி கரக்பூர் வளாகத்தில் மாணவர்களின் மனநலம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகரித்து வரும் கல்வி மன அழுத்தம் குறித்து மீண்டும் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிர்ச்சியளிக்கும் விதமாக, கடந்த 5 மாதங்களில் இந்த வளாகத்திற்குள் நடக்கும் 7-வது இயற்கை மாறா மரணம் இதுவாகும். இதற்கு முன்பாக, ஜூலை 29 அன்று மின் பொறியியல் துறைப் பேராசிரியர் டாக்டர் தீபக் ரெட்டி புல்லாகுரம் தனது ஊழியர் குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையிலும், ஏப்ரல் 28 அன்று எம்.டெக் மாணவர் சோஹம் ஹால்தார் விடுதி அறையிலும், ஏப்ரல் 18 அன்று பி.டெக் மூன்றாம் ஆண்டு மாணவர் ஜெய்பீர் சிங் தோடியா விடுதியின் 8-வது மாடியில் இருந்து குதித்தும் உயிரிழந்தனர். இவ்வாறான தொடர் மரணங்களால் ஐஐடி கரக்பூர் வளாகம் முழுவதும் சோகமும் பதற்றமும் நிலவி வருகிறது.
