LATEST NEWS
“இது ஜப்பான் இல்ல மக்களே… நம்ம கேரளா..!” காசரகோடு இரயில் நிலையத்தின் தூய்மையைப் பார்த்து.. மிரண்டு போன பஞ்சாபி பயணி… வைரலாகும் வீடியோ..!!
இந்தியாவில் உள்ள இரயில் நிலையங்களின் தோற்றம் வேகமாக மாறிவரும் சூழலில், கேரள மாநிலம் காசரகோடு இரயில் நிலையத்தின் தூய்மை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அன்மோல் என்ற பஞ்சாபி பயணி வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், காசரகோடு இரயில் நிலையத்தின் தூய்மையையும் அழகையும் கண்டு தான் முற்றிலும் வியந்துபோனதாகத் தெரிவித்துள்ளார். “இது ஜப்பான் அல்ல, கேரளம்!” என்று கூறும் அவர், கேரளா கல்வியறிவிலும் வளர்ச்சியிலும் சிறந்த மாநிலம் என்று கேள்விப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இவ்வளவு தூய்மையான ஒரு இரயில் நிலையத்தை தான் நேரில் பார்த்ததே இல்லை என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், இரயில் நிலையத்தின் நடைபாதைகளும் இரயில் தண்டவாளங்களும் எவ்வித தூசியோ, குப்பையோ இன்றி மிகவும் தூய்மையாகக் காட்சியளிக்கின்றன. பயணிகள் அனைவரும் மிகுந்த ஒழுக்கத்துடன் இரயிலுக்காகக் காத்திருக்கின்றனர். மேலும், இங்கு பயணிகள் சொகுசாக ஓய்வெடுக்க நவீன விமான நிலையங்களில் இருப்பது போன்ற பிரத்யேக ஓய்வறை மற்றும் மசாஜ் நாற்காலிகள் கொண்ட சிறப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
https://www.instagram.com/reel/Db7GaSbB2gi/?utm_source=ig_web_button_share_sheet
இணையத்தில் வெளியான இந்த வீடியோவை இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் உள்ளூர்வாசி ஒருவர், “எங்கள் நகரத்திற்கு இப்படி ஒரு கௌரவம் கிடைத்துள்ளதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், காசரகோடு ஏழு மொழிகள் பேசப்படும் பூமி என்றும், அங்கு பேக்கல் கோட்டை மற்றும் அனந்தபுரா ஏரி கோயில் போன்ற அழகான சுற்றுலாத் தலங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “எங்கள் பகுதிக்குப் பெருமை சேர்த்ததற்கு நன்றி பாஜி!” என்று உள்ளூர் மக்கள் அந்த பஞ்சாபி பயணிக்குத் தங்களது நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
