CINEMA
விஜய் ஒரு ஏமாற்றுக்காரர்…தவெக மாநாட்டில் பேசியதெல்லாம் பொய்யா?…கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?…முதலமைச்சரை ‘Sofa CM’ என விமர்சித்து ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட அதிரடிப் பதிவு…!
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான தற்போதைய ஆட்சி குறித்து, பிரபல இசையமைப்பாளரும் ஊடகவியலாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்டுள்ள மிகக் காட்டமான விமர்சனப் பதிவு தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் முதல் மாநாட்டுப் பேச்சைக் கேட்டதிலிருந்தே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்பதைத் தான் உணர்ந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன், அன்றைய அரசைப் பற்றி விஜய் பேசிய எல்லாமே பொய்கள்தான் என்றும், அந்தப் பொய்களை உண்மைபோலப் பேசித் தனது ரசிகர்களை நம்ப வைத்ததுதான் அவரது ஒரே முதலீடு என்றும் மிக நேரடியாகக் சாடியுள்ளார்.
விஜய் எதிர்க்கட்சியாக இருந்தபோது முன்வைத்த குற்றச்சாட்டுகளையும், தற்போது ஆட்சியில் இருக்கும்போது நடப்பவற்றையும் ஒப்பிட்டுப் பல அடுக்கடுக்கான புகார்களை ஜேம்ஸ் வசந்தன் அப்பட்டமாகப் பட்டியலிட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று முழங்கிய விஜய்யின் இந்த 15 நாள் ஆட்சியில், 42 கொலைகளும் 74 பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளதாகத் தரவுகள் கூறுவதாகவும், அதில் பாதி குற்றவாளிகள் தவெக-வினர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழகத்தின் கல்வித்தரம் மற்றும் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் குறித்துப் பேசிக் கத்திய விஜய், தற்போது டெல்லி கூட்டங்களில் “தமிழகம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது” என மாற்றி அறிக்கை விடுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கியமாக, ஊழலற்ற தூய ஆட்சி தருவதாகக் கூறிவிட்டு, ஒவ்வொரு தலைவருக்கும் சோஃபா வழங்கி, ஊழலின் அடித்தளத்தில்தான் விஜய் ஆட்சியமைத்துள்ளார் என்று ஜேம்ஸ் வசந்தன் கடுமையாகச் சாடியுள்ளார். CMDA துறையில் வெறும் 3 நாட்களில் 130 கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, சுமார் 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் கைமாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மின்கட்டணக் குறைப்பு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விஜய் ஓடி ஒளிவதாகவும் விமர்சித்துள்ளார். “இந்திய அரசியலிலேயே சோஃபா வழங்கி ஆட்சியமைத்த முதல் முதல்வர் இவர்தான்” என்று குறிப்பிட்டு, முதலமைச்சர் விஜய்யை ‘Sofa CM’ என்று கிண்டலாகப் பதிவிட்டு ஜேம்ஸ் வசந்தன் முடித்திருப்பது இணையத்தில் விவாதங்களை எரியூட்டியுள்ளது.
