CINEMA
3 முறை கட்டாயக் கருக்கலைப்பு.. வீட்ல பெட்ரோல் பாம் வீச்சு…EPS ஐயாவிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை…முன்னாள் அமைச்சர் செய்த நம்பிக்கை துரோகம்.. மகளிர் ஆணையத்தில் நடிகை சாந்தினி கண்ணீர் வாக்குமூலம்…!
கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது, நடிகை சாந்தினி கொடுத்திருந்த ஐந்து ஆண்டுகால குடும்ப வாழ்க்கை மற்றும் கட்டாயக் கருக்கலைப்பு தொடர்பான மோசடிப் புகார் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனக்குச் செய்த நம்பிக்கை துரோகங்களையும், மகளிர் ஆணையத்தில் இன்று நடந்த பரபரப்புச் சம்பவங்களையும் கண்ணீருடன் விவரித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 5 ஆண்டுகள் ஒரே வீட்டில் வாழ்ந்த காலகட்டத்தில், தான் 3 முறை கர்ப்பமடைந்ததாகவும், ஆனால் மணிகண்டன் தன்னை வலுக்கட்டாயமாகத் தொந்தரவு செய்து கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் சாந்தினி குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் மேலும் பேசிய சாந்தினி, “கடந்த 2021-ஆம் ஆண்டு மணிகண்டன் தன்னுடைய ஆட்களை வைத்து எங்களது வீட்டில் பெட்ரோல் பாம் வீசினார். அதன் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப் போகிறார்கள், அதனால் வழக்கை வாபஸ் வாங்கிக்கொள் என்று கூறினர். தொடர்ந்து மணிகண்டனே நேரடியாகச் சந்தித்து மன்னிப்பு கேட்டு, வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்து தருவதாக உறுதியளித்தார். அவர் சொன்ன வார்த்தைகளை நம்பி நான் வழக்கை வாபஸ் பெற்ற இரண்டே நாட்களில் அவரது போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளாக அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை; இது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்று வேதனை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இன்று அனுப்பப்பட்ட இரண்டாவது சம்மனுக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆஜராகவில்லை. மாறாக, அவரது வழக்கறிஞர்கள் மகளிர் ஆணைய அலுவலகத்திற்குள் புகுந்து அதிகாரிகளையே மிரட்டி பெரும் ரகளையில் ஈடுபட்டதாக சாந்தினி தெரிவித்துள்ளார். சாந்தினி ஏற்கனவே வழக்கை வாபஸ் வாங்கிவிட்டதால் மீண்டும் விசாரிக்க முடியாது என அவர்கள் வாதிட்டுள்ளனர். இந்த தொடர் நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடியால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, அதற்கான மருத்துவச் சான்றிதழ்களை மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளதாகக் கூறிய சாந்தினி, தனக்கு நீதி வேண்டும் என்று கண்ணீர்மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
