LATEST NEWS
இது வெறும் டிரெய்லர் தான்… மெயின் பிக்சர் டெல்டாவில் இருக்கு..! அதிமுகவை விமர்சித்து த.வெ.க மேடையில் சி.விஜயபாஸ்கர் பாய்ச்சல்..!!!
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் தங்களை முறைப்படி இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில் பேசிய சி.விஜயபாஸ்கர், தேர்தலுக்கு முன்பாகவே த.வெ.கவுடன் கூட்டணி வைக்குமாறு அதிமுக தலைமையிடம் வலியுறுத்தியதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு செவிசாய்க்காமல் திமுகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டது தவறான முடிவு என்றும் அ.தி.மு.க தலைமை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும், த.வெ.க தலைவர் விஜய்யை “முதலமைச்சர் விஜய்” என்று குறிப்பிட்டுப் பேசிய அவர், அவரது உறுதியான தலைமையின் கீழ் தொடர்ந்து செயல்படப் போவதாகத் தெரிவித்தார். பழையன கழிந்து புதியன புகுந்துள்ளதால் த.வெ.கவில் இணைந்துள்ள ஒவ்வொருவரின் முகத்திலும் உண்மையான மகிழ்ச்சி தெரிகிறது என்றும், மாற்றத்தை நோக்கிய த.வெ.கவின் இந்த வெற்றிப்பயணத்தில் அதிமுகவினர் பலர் தொடர்ந்து இணைந்து வருவதாகவும் உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.
இறுதியாக, மாமல்லபுரத்தில் நடந்த இந்த பிரம்மாண்ட இணைப்பு விழா என்பது வெறும் ‘டிரெய்லர்’ தான் என்றும், உண்மையான ‘மெயின் பிக்சர்’ இனிமேல் டெல்டா மாவட்டங்களில் தான் நடக்கப்போகிறது என்றும் சி.விஜயபாஸ்கர் அதிரடியாகத் தெரிவித்தார். த.வெ.க தலைவரிடம் அனுமதி பெற்று டெல்டா பகுதியில் இதைவிட மிகப்பெரிய அளவில் இணைப்பு விழாவை நடத்திக் காட்டுவோம் எனக் கூறிய அவர், காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றவும், ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் துணையாக நிற்கவும் த.வெ.க உறுதியாகச் செயல்படும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
