LATEST NEWS
பா.ஜ.க. கையில் எடுத்த அடுத்த அஸ்திரம்..! ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டிக்கு எதிராக ஆளுநரிடம் பா.ஜ.க. அதிரடிப் புகார்..!!
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத வெளிநபர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்றதாகக் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம் பாரதிய ஜனதா கட்சி புகார் மனு அளித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சரவைக் கூட்டத்தில் இவர்களின் பங்கேற்பு குறித்த புகாருடன், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் குழந்தைகளிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், தற்போதைய புதிய அரசு பொறுப்பேற்ற 54 நாட்களில் 151 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகளும் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து முதலமைச்சர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும், கடந்த கால திமுக அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் ஆளுநரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் தவறு செய்யும் தமிழக வெற்றிக் கழக கட்சியினர் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்ட அவர், தவெக கட்சிக்கு பின்புலமாக பாஜக செயல்படுகிறது என்ற விமர்சனங்களை முற்றிலுமாக மறுத்தார். அவ்வாறு பின்புலமாக இருந்திருந்தால் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், மோடியின் தலைமையிலான பாஜக உலக அளவில் மிகப்பெரிய கட்சி என்பதால் யாருக்கும் பின்புலமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
