LATEST NEWS
ஜப்பானியர்களை வியக்க வைத்த ‘சிம்பிள்’ பில்லியனர்..! இணையத்தைக் கலக்கும் ஸ்ரீதர் வேம்புவின் வைரல் வீடியோ..!!
ஜோஹோ நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பில்லியனருமான ஸ்ரீதர் வேம்பு, ஜப்பானில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையுடன் நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. உலகப் பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும், எளிமையின் சிகரமாக விளங்கும் அவர், வெளிநாட்டிலும் தனது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் வலம் வந்தது அங்கிருந்த ஜப்பானியர்களையே வியப்பில் ஆழ்த்தி, திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த சுவாரசியமான வீடியோவை ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “ரயிலைப் பிடிக்க ஓடுவதைத் தவிர்த்து வேறு எதாலும் நாம் ஜப்பானில் இருப்பதை உணர்த்த முடியாது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் உள்ள ரயில் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாகவும், மக்கள் ரயிலைப் பிடிக்க ஓடிக்கொண்டும் இருப்பது வழக்கம் என்பதால், அவரும் அந்த பாணியிலேயே ஓடியுள்ளார். வேஷ்டி கட்டிக்கொண்டு ஓடுவது மிகவும் சிரமமான காரியம் என்றாலும், அதை அவர் சாதாரணமாகச் செய்ததைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது எளிமையைப் பாராட்டி வருகின்றனர். இதில் நெட்டிசன் ஒருவர், “நீங்கள் உண்மையிலேயே வேஷ்டி அணிந்துதான் ஜப்பான் சென்றீர்களா? அது எப்படி சாத்தியமானது?” என்று கேட்ட கேள்விக்கு, “ஆமாம், ஏன் சாத்தியமில்லை?” என்று ஸ்ரீதர் வேம்பு நறுக்கென்று பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.
பரபரப்பான இந்த ரயில் பயணத்திற்கு இடையே, ஸ்ரீதர் வேம்பு மற்றொரு நெகிழ்ச்சியான பதிவையும் பகிர்ந்துள்ளார். மோட்டார் வாகனத் துறையின் ‘லிவ்விங் லெஜண்ட்’ என்று அழைக்கப்படும் ஜப்பானின் புகழ்பெற்ற பொறியாளர் யோஷிபுமி ஷிமகாகி என்பவரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். சர்வதேச அளவில் இத்தனை பெரிய உயரங்களை எட்டிய பிறகும், தனது பாரம்பரியத்தையும் எளிமையையும் விட்டுக்கொடுக்காமல் ஜப்பான் மண்ணிலும் வேஷ்டி சட்டையுடன் வலம் வரும் ஸ்ரீதர் வேம்புவின் இந்த குணம், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்குப் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த பல நெட்டிசன்கள், ஆடம்பரத்தை விரும்பாமல் தமிழ்ப் பண்பாட்டை உலகிற்கு பறைசாற்றிய ஸ்ரீதர் வேம்புவின் எளிமையைப் பாராட்டி வருகின்றனர். “பணம் எவ்வளவு இருந்தாலும் சொந்த மண்ணின் கலாச்சாரத்தை மறக்காதவரே உண்மையான பில்லியனர்” என்றும், “மேற்கத்திய உடைகளை மட்டுமே நாகரிகம் என்று நினைப்பவர்களின் வாயடைக்கச் செய்யும் வகையில் இந்த வீடியோ உள்ளது” என்றும் இணையவாசிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
