LATEST NEWS
14 வருட விசுவாசத்துக்கு கிடைத்த பரிசு இதுவா?பதவியை பறித்த கார்ப்பரேட்… வீதிக்கு வந்த அதிகாரி! லிங்க்ட்இன்னில் வைரலாகும் கண்ணீர் பதிவு!
நொய்டாவைச் சேர்ந்த 56 வயதான சஞ்சய் என்பவர், முன்னணி காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் 14 ஆண்டுகளாக நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், 2023-ம் ஆண்டு திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். இத்தனை ஆண்டுகால அனுபவம் இருந்தும், வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவருக்கு வேறு எங்கும் முழுநேர வேலை கிடைக்கவில்லை. இதனால் தனது வாழ்வாதாரத்தைக் காக்க, வேறு வழியின்றி ‘போர்ட்டர்’ செயலியில் பகுதிநேர டெலிவரி பாயாக வேலை செய்யத் தொடங்கினார். சமூகத் தொழில்முனைவோரான கிரண் வர்மா என்பவர் வெறும் 40 ரூபாய்க்கு ஒரு பார்சலை புக் செய்தபோது, அதனை டெலிவரி செய்ய வந்த சஞ்சயின் சோர்வான ஆனால் கண்ணியமான தோற்றத்தைக் கண்டு நெகிழ்ந்து அவரிடம் பேசியதால்தான் இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த உரையாடலின் போது சஞ்சய், கார்ப்பரேட் ஊழியர்களின் நிலையை ‘கறிவேப்பிலைக்கு’ ஒப்பிட்டுச் சொன்ன விஷயம் அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளது. சமைக்கும்போது முதலில் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, சாப்பிடும்போது எப்படி முதலில் தூக்கி எறியப்படுகிறதோ, அதேபோல்தான் நிறுவனங்களும் தங்களுக்குத் தேவைப்படும்போது ஊழியர்களைப் பயன்படுத்திக்கொண்டு, தேவை முடிந்தவுடன் ஈவிரக்கமின்றித் தூக்கி எறிந்துவிடுகின்றன என்று அவர் தனது வேதனையை வெளிப்படுத்தினார். லிங்க்ட்இன் தளத்தில் பகிரப்பட்ட இவரது இந்த உருக்கமான கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், கார்ப்பரேட் உலகின் சுயநலத்தையும் அனுபவமிக்கவர்கள் எதிர்கொள்ளும் வயது பாகுபாட்டையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
