LATEST NEWS
திமுகவின் ‘விசுவாசக் கோட்டை’ உடைகிறதா?தவெக-வுக்கு தாவும் முக்கிய புள்ளிகள்..ஷாக்கில் தமிழக அரசியல்..!
பொதுவாக அரசியல் கட்சிகளில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிகாரம் எங்கு இருக்கிறதோ அங்கே செல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள்; தேர்தல் தோல்விகளின் போது ஆளுங்கட்சியை நோக்கித் தாவுவது இயல்பான ஒன்று. ஆனால், கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் மீதான தீவிர விசுவாசத்தால் திமுகவினர் இதற்கு ஒரு மிகப்பெரிய விதிவிலக்காகத் திகழ்ந்தனர். எத்தகைய வீழ்ச்சியிலும் கட்சியுடனேயே நின்ற அவர்களின் அந்த நிலைப்பாடு, சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் அடியோடு மாறியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதும், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வியும் திமுகவின் அசைக்க முடியாத விசுவாசக் கட்டமைப்பை ஆட்டம் காணச் செய்துள்ளது.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து பல நிர்வாகிகள் தவெக-வை நோக்கிச் சென்ற நிலையில், தற்போது கட்சி மாறும் அந்தப் படலம் திமுகவிலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப், இலக்கிய அணிச் செயலாளர் வி.பி. கலைராஜன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் குமரன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள், 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சமீபத்தில் தவெக-வில் ஐக்கியமாகியுள்ளனர். மாற்று முகாமிலிருந்து வருபவர்களுக்குத் தவெக-வில் விரைவில் முக்கியப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த அணிமாறும் போக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்குப் பெரும் அரசியல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
