LATEST NEWS
பள்ளிக்கூடம் என்ன தவெக தியேட்டரா? ஜோசப் விஜய்யின் கரூர் பாவ மன்னிப்பு.. தவெகவை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!
அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேரலையாகத் திரையிடப்பட்ட விவகாரத்திற்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல, அரசியலின் மேடை அல்ல” என்று தவெக அரசு கூறிவிட்டு, அடுத்த நாளே பள்ளி மாணவர்களுக்குக் கட்சியின் அரசியல் உரையை நேரலை செய்வது அருவருப்பான அரசியல் வியூகம் என்று அவர் சாடியுள்ளார். மேலும், சட்டமன்ற விவாதங்களைக் கூடத் தடையின்றி நேரலையில் ஒளிபரப்ப முடியாத இந்த அரசிற்கு, தவெகவின் கட்சி நிகழ்வை மட்டும் அரசுப் பள்ளிகளில் திரையிட எப்படித் துணிச்சல் வந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன், “வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, பள்ளிக் குழந்தைகளைப் பார்க்கச் செய்யுமளவிற்கு இந்த கரூர் நிகழ்வு என்ன அறிவார்ந்த அரசு நிகழ்ச்சியா?” என்று ஆவேசமாக வினவியுள்ளார். இது கடந்த ஆண்டு தவெக தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட விபத்து பாதிப்பிற்கு, ஜோசப் விஜய் மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்கும் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி மட்டுமே என்று அவர் விமர்சித்துள்ளார். விளம்பர மோகத்தால் பள்ளிக்கூடங்களையும், படிக்கும் மாணவர்களையும் தங்களின் அரசியல் தூதுவர்கள் போலப் பாவிக்கும் தவெகவின் இத்தகைய ஆணவப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
