LATEST NEWS
“ஆதாரம் இருக்கு!”.. முதல்வர் விஜய் மீது ஆளுநரிடம் அதிரடி புகார் கொடுத்த ஆர்.எஸ்.பாரதி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழக முதல்வர் விஜய், எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்திலும், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலும் ஈடுபட்டு வருவதாகத் தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில ஆளுநர் அர்லேகரைச் சந்தித்துப் புகார் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். சமீபத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியையும், கட்சியையும் ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், தாங்களாக வரவில்லை என்றும், த.வெ.க. தங்களை அணுகியதால் தான் இணைந்தோம் என்றும் வெளிப்படையாகக் கூறினார். இந்த வாக்குமூலமே த.வெ.க.வின் குதிரை பேரத்தை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரம் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதி, இது தொடர்பாக ஆளுநருக்கும், சி.பி.ஐ.க்கும் மின்னஞ்சல் மூலம் கூடுதல் புகாரை அனுப்பியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததற்கு குதிரை பேரம் தான் முக்கியக் காரணம் என்றும், அதற்கான தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதை நினைவுகூர்ந்த அவர், கடந்த 4-ம் தேதியும் ஆளுநரைச் சந்தித்து இது குறித்துப் பேசியதாகக் குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் விஜய் கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டதாகக் கீழ்த்தரமாகப் பேசி வருவதாகவும் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார்.
