LATEST NEWS
60 பள்ளிகள்… ரூ.100 கோடி ஸ்வாஹா..! தனியார் பள்ளிகளை ஏமாற்றிய பி.டி அரசகுமார் யார்..? பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்கள்..!!
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம், கட்டட அனுமதிகள் மற்றும் தரமுயர்த்தல் சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மோசடி செய்த வழக்கின் சூத்திரதாரியான பி.டி. அரசகுமார் என்பவரின் கூட்டாளிகள் இருவரைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசியல் பிரமுகரான பி.டி. அரசகுமார், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பதிவு செய்யப்படாத போலியான அமைப்பைத் தொடங்கி இந்த பிரம்மாண்ட மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை பெருநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதிகார வர்க்கத்திலும் அரசியல் வட்டாரத்திலும் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி பள்ளிகளுக்கான டிடிசிபி சிஎம்டிஏ (CMDA) அனுமதிகள் மற்றும் நிரந்தர அங்கீகாரத்தை விரைவாகப் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் அரசகுமார் பல லட்சக்கணக்கில் வசூல் செய்துள்ளார்.
ஆனால், வாக்குறுதி அளித்தபடி அனுமதியையும் வாங்கித் தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் பள்ளி நிர்வாகங்களை ஏமாற்றி வந்ததால், கடந்த ஜூன் மாதம் பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரசகுமார் மீது 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் அடுத்தடுத்து புகார்களைக் குவித்ததால், அவரின் மோசடித் தன்மையைக் கருத்தில் கொண்டு அண்மையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை பாய்ந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த ₹100 கோடி மோசடியில் அவருக்குத் துணையாகச் செயல்பட்டு பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பணத்தை வசூலித்துக் கொடுத்த அவரது உறவினர்களான மதுரையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்ற ராஜா (39) மற்றும் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் (49) ஆகிய இரு கூட்டாளிகளையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகள் இந்த போலி அமைப்பை நம்பி ஏமாந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பிற பள்ளி நிர்வாகிகளும் தைரியமாக முன்வந்து புகார்களை அளிக்கலாம் எனச் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. அரசகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளின் வங்கிக் கணக்குகள், சொத்து விவரங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மோசடி வலையமைப்பில் தொடர்புடைய மேலும் பல முக்கியப் புள்ளிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
