LATEST NEWS
“என்ன ஒரு தில்லு..! திருட வந்தியா இல்ல சொந்தக்காரன் வீட்டுக்கு வந்தியா..?!ஷோரூம்ல 4.5 மணி நேரம் ஜாலி பண்ணிட்டு… நைஸா KTM பைக்க தூக்கிட்டு போன ‘ஜாலி’ திருடன்..! வாராணசி ஷோரூம்ல நடந்த அநியாயக் கூத்து..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள மண்டுவாடீஹ் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு பிரபல KTM ஆட்டோமொபைல் ஷோரூமில் மிகவும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திங்கள்கிழமை இரவு சுமார் 10 மணிக்கு ஊழியர்கள் ஷோரூமைப் பூட்டிவிட்டுச் சென்றனர். இரவு 11:30 மணியளவில், கையில் அம்மன் படத்துடன் வெள்ளைச் சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்த வாலிபன் ஒருவன் ஷோரூம் வாசலுக்கு வந்துள்ளான். அப்போது மழை பெய்யத் தொடங்கியதால், வெளியே இருந்த பேனரைக் கிழித்துப் போர்த்திக் கொண்டு, கண்ணாடி கதவைக் கட்டரால் அறுக்கத் தொடங்கினான். சுமார் 36 நிமிடங்கள் போராடி, நள்ளிரவு 12:06 மணிக்கு ஷோரூமிற்குள் நுழைய முடிந்தது.
உள்ளே சென்ற திருடன் ஷோரூம் உரிமையாளரைப் போல மிகவும் நிதானமாக நடந்து கொண்டுள்ளான். வரவேற்பறையில் இருந்த கணினியை ஆன் செய்து, சுழல் நாற்காலியில் அமர்ந்து சுற்றியுள்ளான். பின்னர் மினி ஃபிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரைக் குடித்துவிட்டு, காபி மெஷினில் சூடான காபி தயாரித்து அருந்தியுள்ளான். அத்துடன் நிற்காமல், ஷோரூமின் கழிவறைக்குச் சென்று நிதானமாகக் குளித்துவிட்டு, தன் ஈரத் துணிகளை ஒரு பைக்கின் மீது காயப்போட்டுள்ளான். தொடர்ந்து, அங்கிருந்த ஒரு புதிய பைக்கின் கவரைப் பிரித்து லுங்கி போல கட்டிக்கொண்டு, கணினியில் பாடல்களை ஒலிக்கவிட்டு நீண்ட நேரமாக ‘லுங்கி டான்ஸ்’ ஆடியுள்ளான்.
அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பாக, ஷோரூமிலிருந்த பிராண்டட் டி-ஷர்ட் மற்றும் தொப்பியை அணிந்துகொண்டு, அதிகாலை 4 மணியளவில் ஷோரூம் மேலாளருக்குச் சொந்தமான ரூ. 4.71 லட்சம் மதிப்பிலான புதிய KTM அட்வென்ச்சர் 390 S பைக்கை ஸ்டார்ட் செய்து தப்பிச் சென்றுவிட்டான். செவ்வாய்க்கிழமை காலையில் பாதுகாப்பு ஊழியர் உடைந்த கண்ணாடியைப் பார்த்து மேலாளர் ரோஹித் குமார் சிங்கிற்குத் தகவல் அளித்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சிசிடிவி காட்சிகள் மற்றும் விரல்ரேகைகளின் உதவியுடன் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருவதாக மண்டுவாடீஹ் காவல் நிலைய அதிகாரி அஜய் வர்மா தெரிவித்துள்ளார்.
