LATEST NEWS
“என்ன கொடுமைப்பா இது..!” சத்தான உணவுக்குப் பதில் பூரியும் உப்பும் மட்டும் தானா..? அங்கன்வாடி வீடியோவைப் பார்த்து ஆவேசமான பொதுமக்கள்..! உண்மை வெளிவந்ததால் பரபரப்பு நடவடிக்கை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மைஹர் மாவட்டத்தில் உள்ள கக்ரா அங்கன்வாடி மையத்தில், சத்தான மதிய உணவிற்குப் பதிலாகச் சிறு குழந்தைகளுக்கு பூரியும் உப்பும் மட்டுமே உணவாக வழங்கப்பட்டுள்ளது. அனகன்வாடி மையத்தில் சாப்பிடும் குழந்தையிடம் உணவாக என்ன கொடுக்கப்பட்டது என்று கேட்டபோது, “பூரி மற்றும் உப்பு” என்று சிறுமி பதிலளிக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பையும் உணவின் தரம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இச்சம்பவத்தைக் கவனத்தில் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. வைரலான இக்காணொளி சுமார் மூன்று மாதங்கள் பழமையானது என்றும், அது சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட பிறகே துறை நடவடிக்கை எடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் ராஜேந்திர பாங்டே ஆகியோரின் உத்தரவின்பேரில், திட்ட அலுவலர் அகிலேஷ் தீபங்கர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களும் சூழ்நிலைகளும் தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், திட்ட அதிகாரியிடமிருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் மாவட்ட திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, விதிகளின்படி இத்தவற்றுக்குக் காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இருப்பினும், இச்சம்பவம் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துத் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மீண்டும் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
