LATEST NEWS
100 வருஷத்துல ஃபர்ஸ்ட் டைம்… ஸ்பெயினில் நடந்த அந்த ‘1 நிமிடம் 48 வினாடி’ அதிசயம்…! இணையத்தில் வைரலாகும் சூரிய கிரகண காட்சிகள்..!!
ஐரோப்பிய கண்டம் ஆகஸ்ட் 12 புதன்கிழமை அன்று ஒரு அபூர்வமான முழு சூரிய கிரகணத்தைக் கண்டது. கடந்த 27 ஆண்டுகளில் ஐரோப்பாவில் நிகழ்ந்த முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும். சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சரியாகக் குறுக்கிட்டு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஸ்பெயின் மற்றும் ஐஸ்லாந்தின் சில பகுதிகள் பகல் நேரத்திலேயே திடீரென இருளில் மூழ்கின. சுமார் 290 முதல் 300 கிலோமீட்டர் அகலமுள்ள பாதையில் இந்த முழு கிரகணம் நிகழ்ந்தபோது, சந்திரனின் கருப்பு உருவத்தைச் சுற்றி சூரியனின் பிரகாசமான ‘கொரோனா’ பகுதி மோதிரம் போல ஒளிரும் அற்புதக் காட்சி தென்பட்டது.
ஸ்பெயினில் இந்த அரிய நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கேமராக்கள் மற்றும் சிறப்புப் பாதுகாப்பு கண்ணாடிகளுடன் பூங்காக்கள், கிராமப்புறங்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் திரண்டனர். வடக்கு ஸ்பெயினில் அதிகபட்சமாக 1 நிமிடம் 48 வினாடிகள் வரை இந்த முழுமையான இருள் நீடித்தது. பகல் பொழுதே இரவாக மாறிய அந்த கணத்தில் மக்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டு கைதட்டி மகிழ்ந்தனர். ஸ்பெயினின் பிரதான நிலப்பரப்பில் 1912-ஆம் ஆண்டிற்குப் பிறகு அதாவது நூறாண்டுகளுக்கு மேல் கழித்து நிகழ்ந்த முதல் முழு சூரிய கிரகணம் இது என்பதால், இது பார்வையாளர்களுக்கு ஒரு வாழ்நாள் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
இந்த அதிசய வானியல் நிகழ்வின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி இணையவாசிகளின் கவனத்தைக் கவர்ந்தன. குறிப்பாக, ஸ்பெயினின் காஸ்ட்ரோஜெரிஸ் பகுதியில் சூரியகாந்திப் பூந்தோட்டங்களின் பின்னணியில் கிரகணம் தோன்றியக் காட்சியும், தாரகோனா நகரில் பகல் நேரத்திலேயே இருள் சூழ்ந்தக் காட்சியும் வைரலாகின. “பகல் நேரத்திலேயே ஸ்பெயின் இருண்டது, இது முற்றிலும் நம்ப முடியாத உலகத்திற்கு அப்பாற்பட்ட அதிசயம்” என நெட்டிசன்கள் இணையத்தில் தங்களது வியப்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.
