LATEST NEWS
ரொம்ப புத்திசாலி அவ பெயர் என்ன..? 35% பேர் முட்டாள்கள் தான்… அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக மாஜி அமைச்சர் ஆர்.காந்தி..!!
காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி, ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலை மாசு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக வெற்றி கழக அரசின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் விமர்சித்துப் பேசியுள்ளார். ராணிப்பேட்டையில் இல்லாத ஒரு நிறுவனத்தை (ஜே.கே. டயர்ஸ்) மூடச் சொல்லி தவெக எம்.எல்.ஏ தாஹிரா பேரவையில் பேசியதாகவும், அதற்கு அமைச்சர் கீர்த்தனா பதிலளித்ததாகவும் கூறி அவர் விமர்சித்தார். “அப்படி ஒரு நிறுவனமே அங்கு கிடையாது, அதைப்பற்றிப் பேசும் அந்தத் தொழில்துறை அமைச்சர் ரொம்ப புத்திசாலி, அவ பெயர் என்ன? கீர்த்தனா” என்று ஒருமையில் குறிப்பிட்டுக் காட்டமாகப் பேசினார்.
மேலும் தவெக அரசைத் தொடர்ந்து சாடிய முன்னாள் அமைச்சர் காந்தி, “கடந்த சட்டமன்றத் தேர்தலில் 34% பேர் முட்டாள்களாக இருந்ததால் தான் தமிழ்நாட்டில் இந்த ஆட்சி மாற்றமே நிகழ்ந்தது” என்று வாக்காளர்களையும், தவெகவின் வெற்றியையும் கடுமையாகச் சாடினார். இதனால்தான் தற்போதைய தவெக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் பெயர்களை மாற்றுவது மட்டும்தான் இந்த தவெக அரசின் தற்போதைய சாதனையாக உள்ளது என்று எள்ளி நகையாடினார். இல்லாத நிறுவனங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிப்பதும், திட்டங்களின் பெயர்களை மாற்றுவதுமே இவர்களின் தற்போதைய நிர்வாகம் என திமுக முன்னாள் அமைச்சர் காந்தி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
