LATEST NEWS
“இது வெறும் வண்டி இல்ல… என் உயிர்… 8 வருஷமா ஓட்டுன பஸுக்கு முத்தம் கொடுத்து விடைபெற்ற ஓட்டுநர்… கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..! இதயத்தை தொடும் வைரல் வீடியோ..!!”
கேரளா மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் 18 ஆண்டுகள் ஓட்டுநராகப் பணியாற்றிய பால் குரியன் என்பவர், தான் கடந்த 8 ஆண்டுகளாக இயக்கி வந்த பேருந்துக்கு முத்தமிட்டு உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இடுக்கி மாவட்டம் கட்டப்பனையைச் சேர்ந்த இவர், கம்பம் – குமிளி – கருவாக்குளம் – கோட்டயம் வழித்தடத்தில் தொடர்ந்து அதே பேருந்தை ஓட்டி வந்தார். பணிநிறைவு நாளில் டிப்போவை விட்டுப் புறப்படுவதற்கு முன், அந்தப் பேருந்தைத் தொட்டு கும்பிட்டு, அதன் முன்பகுதியில் அன்போடு முத்தமிட்டார். “இத்தனை ஆண்டுகளாகப் பயணிகளையும் என்னையும் பாதுகாத்தது நான் அல்ல, இந்தச் பேருந்துதான்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அவருடன் பணியாற்றிய சக ஊழியர்களும் நண்பர்களும் படம்பிடித்த இந்த வீடியோ இணையத்தில் பரவி, பலரது இதயங்களையும் தொட்டுள்ளது. பால் குரியனின் அதிகாரப்பூர்வ பணி ஓய்வு அக்டோபர் 31-ஆம் தேதி வரவுள்ள நிலையில், அதற்கான விடுப்பில் செல்வதற்கு முன் தனது கடைசிப் பணி நாளில் இந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து, பல்லாயிரக்கணக்கான பயணிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற அந்தப் பேருந்துடன் அவருக்கு இருந்த பிணைப்பை இந்த விடைபெறல் காட்சி வெளிப்படுத்தியது.
இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள கேரளா மாநில முதல்வர் வி.டி. சதீசன், பால் குரியனின் அர்ப்பணிப்பு உணர்வையும் மரியாதையையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். “பல ஆண்டுகளாகத் தீவிர பக்தியோடு ஓட்டிய பேருந்துக்கு ஸ்ரீ பால் குரியன் காட்டிய இந்த உணர்ச்சிப்பூர்வமான விடைபெறல் என்னை ஆழமாகத் தொட்டுவிட்டது; இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான ஊழியர்களின் அயராத உழைப்பும் பெருமையும்தான் நமது பொதுப் போக்குவரத்து அமைப்பின் உண்மையான முதுகெலும்பு” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் KSRTC அமைப்பை நவீனமாக்குவதோடு, அதன் சேவையை மேலும் வலுப்படுத்த அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
