LATEST NEWS
“பெண்கள் பகடைக்காய் அல்ல..!” நீங்கள் இந்த உலகத்திற்கு வந்ததே ஒரு தாயால் தான்..! நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சுக்கு.. எக்ஸ் தளத்தில் விளாசித்தள்ளிய குஷ்பு..!!
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரிகமாகப் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘அப்பாவை காணோம்’ என்ற முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு எதிர்வினையாக நயினார் நாகேந்திரன் அநாகரிகமாகப் பேசியதாகக் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நடிகையும் பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவருமான குஷ்பு, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக முதலமைச்சரின் தாயார் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த தரக்குறைவான கருத்து அருவருப்பானது என்றும், எந்தவொரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி எப்போதும் ‘நாரி சக்தி’ குறித்தே பேசி வருவதாகவும், பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வரும் சூழலில், நயினார் நாகேந்திரனின் இத்தகைய கருத்துகள் மிகவும் கீழ்த்தரமானவை; இதைக் கேட்டு தான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெண்களின் கண்ணியம் மற்றும் நேர்மையை அவமதிப்பதையோ அல்லது கேள்விக்கு உள்ளாக்குவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள குஷ்பு, “கட்சியை விமர்சியுங்கள், மக்களுக்காகக் குரல் கொடுங்கள், அரசு செயல்படத் தவறினால் அதைத் தாக்குங்கள்; ஆனால் உங்கள் கருத்தை முன்வைக்க ஒருபோதும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தாதீர்கள், அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணை அவமதிக்கும் முன் ஒரு தாயின் காரணமாகவே இந்த உலகில் இருக்கிறோம் என்பதை நினைக்க வேண்டும் என்றும், தாய்க்கு இழைக்கப்படும் இத்தகைய அவமரியாதை மிகுந்த வேதனையையும் மனக்காயத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
