LATEST NEWS
முதல்வர் விஜய்க்குத் தூக்கமே வருவதில்லை… ஒருத்தர் மேல கூட காவல்துறையினர் கை வைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு… தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உருக்கம்..!!
“தூய்மைப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருந்துவதால், தமிழக முதல்வர் விஜய்க்குத் தூக்கமே வருவதில்லை” என்று தமிழக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 16 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பணியாளர்களின் மத்தியில் பேசிய அமைச்சர், அரசின் கவலையை வெளிப்படுத்தினார்.
கடந்த திமுக ஆட்சியின் போது தங்களின் உரிமைகளுக்காகப் போராடிய தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டதை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டினார். ஆனால், தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், ஜனநாயக ரீதியாகப் போராடும் தூய்மைப் பணியாளர்கள் ஒருவர் மீது கூட காவல்துறையினர் கை வைக்கக் கூடாது என்று முதல்வர் விஜய் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தவெக அரசு தங்களின் போராட்ட உரிமையை மதிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், தமிழகத்தில் தவெக புதிய அரசு பொறுப்பேற்று தற்போது 100 நாட்களே ஆகிறது என்பதை நினைவூட்டிய அமைச்சர், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்து நிறைவேற்றத் தங்களுக்குக் கூடுதல் அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்தார். எந்தச் சூழ்நிலையிலும் தூய்மைப் பணியாளர்களை இந்த அரசு விட்டுக் கொடுக்காது என்றும், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு விரைவில் நல்லதொரு தீர்வு எட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துப் பேசினார்.
