LATEST NEWS
புலி பட வருவாயை மறைத்த உத்தமரே..! கொடநாட்டில் கைகட்டி வாய் பொத்தி முனகியதை மறந்துட்டீங்களா..? முரசொலி மாறனைப் பேச விஜய்க்கு என்ன தகுதி..? தயாநிதி மாறன் காட்டம்..!
மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், தமிழக முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, திமுக மீது மிசா மற்றும் சர்க்காரியா ஆணையம் குறித்து முதலமைச்சர் விஜய் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறினார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தயாநிதி மாறன், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நடக்கும் கொலைகளுக்குப் பதிலளிக்கத் தெரியாமல் முதலமைச்சர் எமெர்ஜென்சி கால அறிக்கைகளில் பதில் தேடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “புலி” பட வருவாயை மறைத்தவருக்கு ஊழலைப் பற்றியோ, மிசாவைப் பற்றியோ பேச என்ன அருகதை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழாவை தயாநிதி மாறன் நினைவு கூர்ந்துள்ளார். அந்தச் சமயத்தில் நடிகர் விஜய் மீது வருமானவரி வழக்கு நிலுவையில் இருந்ததால், அவரை மேடையில் ஏற்றக் கூடாது என அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், முரசொலி மாறனின் மகனான தான்தான் வாதாடி விஜய்யை மேடையில் நிற்க வைத்து அவருக்கான உரிய மரியாதையைப் பெற்றுத் தந்ததாகத் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார். அன்று தபால் தலையைப் பெற்றுக்கொண்டு சிரித்த விஜய், இன்று தன்னை கொச்சைப்படுத்துவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சுகிறார் என்றும், உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவிற்குப் பெருமை தேடித்தந்த தனது தந்தை முரசொலி மாறனைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை என்றும் சாடியுள்ளார். மேலும், தனது திரைப்படத்திற்காக கொடநாட்டில் ஒரு நாள் முழுவதும் காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய் பொத்தி விஜய் முனகியதை யாரும் மறந்துவிட முடியாது என்றும் தயாநிதி மாறன் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
