CRIME
திக் திக் திக்.. தடுப்பானில் மோதிய அடுத்த நொடியே பற்றி எரிந்த கார்.. பிரபல மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மற்றும் கம்மம் நகரங்களை இணைக்கும் 365-வது தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற வால்வோ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பானில் மோதி தீப்பிடித்த கொடூர விபத்தில், பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உயிரோடு கருகி பலியாகியுள்ளார். கம்மம் பகுதியில் உள்ள மமதா மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் காசாகுர்த்தி ஜெகதீஷ் என்பவரே இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் ஆவார். கம்மத்திலிருந்து ஐதராபாத் நோக்கி அவர் காரை ஓட்டிச் சென்றபோது, பில்லலமர்ரி என்ற இடத்திற்கு அருகே இந்த விபத்து அரங்கேறியுள்ளது. கார் தடுப்பானில் மோதிய அடுத்த கணமே பயங்கரமாகத் தீப்பிடித்துக் கொண்டதால், காரின் உள்பகுதியில் சிக்கிய மருத்துவர் ஜெகதீஷ் வெளியேற முடியாமல் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் காவல் துறையினரும் தீயணைப்புப் படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலையில் காரை இயக்கியபோது ஓட்டுநருக்கு ஏற்பட்ட கண் அசதி அல்லது தூக்கக் கலக்கத்தின் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். விபத்து நடப்பதற்கு முன்பாக மாமில்லகுடெம் சுங்கச்சாவடியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், காரில் மருத்துவர் ஜெகதீஷ் மட்டுமே தனியாகப் பயணம் செய்ததை முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
