LATEST NEWS
அடக்கடவுளே..! காட்டிக்கொடுத்த உடைந்த கண்ணாடி வளையல்… வசமாக சிக்கிய இட்லி கடை ஓனரம்மா… கோவை மூதாட்டி கொலை வழக்கில் சிசிடிவியால் அதிர்ச்சி..!!
கோவை குனியமுத்தூர் வெத்தலைக்காரர் வீதியில் தனியாக வசித்து வந்த விஜயலட்சுமி (54) என்ற மூதாட்டி, கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட ஆய்வில், உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் செயின் காணாமல் போயிருந்தது தெரியவந்ததால், நகைக்காகவே இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியபோது, மூதாட்டியின் சடலத்திற்கு அருகில் சில உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த உடைந்த வளையல் துண்டுகளே வழக்கின் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த இட்லி கடை உரிமையாளரான விஜயலட்சுமி (42) என்பவர் மூதாட்டியின் வீட்டிற்குச் சென்று வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
அந்தச் சிசிடிவி பதிவுகளைக் கூர்ந்து கவனித்தபோது, இட்லி கடை உரிமையாளர் வீட்டிற்குள் செல்லும்போது அவரது கைகளில் இருந்த கண்ணாடி வளையல்கள், வெளியில் வரும்போது இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்துப் போலீஸார் கெடுபிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து அவரிடமிருந்த தங்கச் செயினைக் திருட முயன்றபோது அவர் கூச்சலிட்டதாகவும், இதனால் அச்சமடைந்து மூதாட்டியின் வாயைப் பலமாகப் பொத்தியதால் மூச்சுத் திணறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும் இட்லி கடை உரிமையாளர் ஒப்புக்கொண்டார்.
அந்தப் போராட்டத்தின்போதே கொலையாளியின் கை வளையல்கள் உடைந்து விழுந்தது விசாரணையில் அம்பலமானது. நகைக்காகப் பக்கத்து வீட்டு மூதாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்த இட்லி கடை உரிமையாளர் விஜயலட்சுமியைக் கைது செய்த குனியமுத்தூர் காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
