LATEST NEWS
“48 மணி நேரம் தான் டைம்… இல்லைனா ஜந்தர் மந்தர் 2.0 உருவாகும்..!” தேர்தல் ஆணையத்தை மிரட்டும் கரப்பான்பூச்சி கட்சி..!!
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகத் தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ள சூழலில், அவர் உடனடியாகப் பதவி விலகக் கோரி காக்கரொச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே 48 மணி நேரக் கெடு விதித்துள்ளார். இந்த அவகாசத்திற்குள் அவர் தனது பதவியைத் துறக்கவில்லை என்றால், நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் சதித்திட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ‘ஜந்தர் மந்தர் 2.0’ என்ற பெயரில் நாடு தழுவிய அளவிலான மிகப் பெரிய தொடர் போராட்டங்கள் வெடிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் வெறும் கட்சி சார்ந்த அரசியல் மோதல் கிடையாது என்றும், ஒட்டுமொத்த தேசத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் முறையின் வெளிப்படைத்தன்மையைக் காப்பதற்கான ஒரு தீவிரப் போராட்டம் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. முதலாவதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகி அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் தேர்தல்களையும் உடனடியாக நிறுத்தி வைத்துவிட்டு, தற்போதைய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலுக்குப் பதிலாக 2025-ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலையே மீண்டும் பயன்படுத்த வேண்டும். மூன்றாவதாக, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் 2023-ஆம் ஆண்டுச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் சிவில் சமூகத்தினரின் பங்கேற்போடு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.
