LATEST NEWS
“சதித் திட்டங்களை புரிஞ்சுக்கிட்டு அடிங்க..!” வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த அதிரடி அறைகூவல்… சர்வதேச அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு..!!
ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டித் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அதிரடியான அறிவுரை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் தங்களின் உண்மையான எதிரி யார் என்பதை முதலில் துல்லியமாக அடையாளம் கண்டு, அவர்களின் சதித் திட்டங்களைப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவுடன் கைகோர்த்து ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்குப் பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களைக் கொடுத்து வரும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் மொஜ்தபா கமேனியின் இந்தக் கருத்துக்கள் சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் பொதுவான மற்றும் உண்மையான எதிரிகள் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் ராணுவப் பாதுகாப்பிற்கு ஒருபோதும் கேடயமாகச் செயல்படக் கூடாது என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார். மேலும், இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே உள்ள இனம், கலாச்சாரம், அரசியல் மற்றும் புவியியல் வேறுபாடுகளைப் பயன்படுத்தி எதிரி நாடுகள் திட்டமிட்டுப் பிளவுகளை உண்டாக்கி வருவதாகவும், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ எதிரிகளுக்குத்தான் உதவுகிறார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். “இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் அன்று முதல் ஒன்றுபட்டிருந்தால், பாலஸ்தீன மக்கள் இன்று இந்த அளவுக்கு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா?” என்ற காரசாரமான கேள்வியையும் முன்வைத்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களுக்கு இனி “பாதுகாப்பான புகலிடம்” இருக்காது என்றும் அவர் அதிரடியாகத் தனது கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
