“வழக்கை மூடி மறைத்தது திமுக ஆட்சிதான்..!” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிபிஎம் சண்முகம் விடுத்துள்ள அதிரடி சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வழக்கை மூடி மறைத்தது திமுக ஆட்சிதான்..!” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிபிஎம் சண்முகம் விடுத்துள்ள அதிரடி சவால்..!!

Published

on

பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட போதிலும், முறையான விசாரணை நடத்தப்படாமல் ‘ஆதாரம் இல்லை’ எனக் கூறி வழக்கு முடிக்கப்பட்டது குறித்து தார்மீகப் பொறுப்பேற்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்தது யார் என்பதை ஸ்டாலின் தனது அறிக்கையில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் இந்த வழக்கு மீண்டும் தீவிரமடைந்ததற்குக் காரணம் தவெக அரசு அல்ல, மாறாகப் போக்சோ நீதிமன்ற நீதிபதி பத்மாவின் அதிரடி உத்தரவுதான் என்று சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெம் வீரமணி வழக்கை அதிமுக, திமுக, தவெக என எந்தக் கட்சியுமே சரியாக விசாரிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும், நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகே இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், குற்றவாளிக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகக் கூறி தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இருப்பதால், அவர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சண்முகம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in