CRIME
கொலையா..? தற்கொலையா..? பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்.. இளம் துறவிக்கு நேர்ந்த கொடூரம்.. பிருந்தாவனத்தில் பெரும் பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள வராக் காட் பகுதியில் அமைந்துள்ள, புகழ்பெற்ற துறவி பிரேமானந்த் மகாராஜின் கேலிகுஞ்ச் ஆசிரமத்தின் சீடர் ஒருவரின் மர்ம மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரைச் சேர்ந்த தீபக் என்ற ரசிக் துலாரி ஷரன் (25) என்ற இளம் துறவி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரேமானந்த் மகாராஜிடம் தீட்சை பெற்று ஆசிரமத்தின் அருகே உள்ள ‘குரு கிருபா குஞ்ச்’ என்ற நான்கு மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் சர்வோதயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இளம் துறவியின் மரணத்தைத் தொடர்ந்து போலீசார் அவரது அறையைச் சோதனையிட்டபோது, அங்கு ரத்தக்கறை படிந்த கிரைண்டர் மற்றும் ஒரு டைரி கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்த துறவியின் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது இந்த வழக்கில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அரைக்கும் கருவியைக் கொண்டு அவர் தனக்குத் தானே காயத்தை ஏற்படுத்திக் கொண்டு தற்கொலை செய்தாரா அல்லது யாரேனும் அவரைத் தாக்கிவிட்டு மாடியில் இருந்து தள்ளிவிட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். அவர் மாடியில் இருந்து கீழே குதிக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார், தடயவியல் குழுவினரின் உதவியுடன் இந்த விசித்திர மர்ம மரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
