LATEST NEWS
நடுக்கடலில் பயங்கரம்: சோமாலியக் கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு.. இந்திய மாலுமி உள்பட 5 பேர் துடிதுடித்துப் பலி..!!
சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலை மீட்கும் அதிரடி நடவடிக்கையின் போது, கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பண்ட்லெண்ட் தன்னாட்சி மாகாணக் கடற்கரை அருகே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு, பலாவு நாட்டு கொடியுடன் 17 மாலுமிகளுடன் பயணித்த இந்தக் கப்பலை கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி சோமாலியக் கடற்கொள்ளையர்கள் நடுக்கடலில் சிறைபிடித்துக் கடத்திச் சென்றனர். சுமார் ஐந்து மாதங்களாகக் கொள்ளையர்களின் பிடியில் இருந்த இந்தக் கப்பலை மீட்பதற்காகச் சோமாலியக் கடற்படையினர் இன்று அதிரடி மீட்பு வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த அதிரடி மீட்பு நடவடிக்கையின் போது, கடற்கொள்ளையர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு இந்தியர், ஒரு மியான்மர் நாட்டவர் மற்றும் மூன்று பாகிஸ்தானியர்கள் என மொத்தம் 5 மாலுமிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எனினும், கடற்படையினர் தங்களது கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கப்பலில் இருந்த எஞ்சிய 12 மாலுமிகளையும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கச்சா எண்ணெய் கப்பலையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.
