CRIME
அடக்கொடுமையே..! மனைவியை திட்டியதால் ஆத்திரம்.. ‘த்ரிஷ்யம்’ படம் பார்த்து மாஸ்டர் பிளான்… 2000 கி.மீ வந்து தந்தையைக் கொன்ற மகன்…! கடைசியில் காட்டிப் கொடுத்த ஒரே ஒரு ‘மிஸ்டேக்’..!!
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம், ஹலை காவல் எல்லைக்குட்பட்ட தர்பா கிராமத்தைச் சேர்ந்த ரகுவீர் சஹ்னி என்பவரை அவரது மகன் சிவ சங்கர் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சிவ சங்கருக்கு, நிலத்தகராறு காரணமாகத் தனது தந்தையுடன் பிரச்சனை இருந்துள்ளது. மேலும், ரகுவீர் சஹ்னி தனது மருமகளைப் தகாத வார்த்தைகளால் திட்டப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவ சங்கர், சூரத்தில் இருந்தபோது அஜய் தேவ்கன் நடித்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தைப் பார்த்து, அதிலிருந்து ஈர்க்கப்பட்டுத் தந்தையைக் கொல்லத் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக சூரத்தில் இருந்து இரயிலில் பீகார் வந்து சேர்ந்துள்ளார்.
திட்டமிட்டபடி, பாட்னா மற்றும் ஹாஜிப்பூர் வழியாக படோரி இரயில் நிலையத்தை அடைந்த சிவ சங்கர், அங்கிருந்து ஆட்டோவிலும், பின்னர் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்தும் இரவோடு இரவாகத் தனது சொந்தக் கிராமத்தைச் சென்றடைந்தார். ஜூலை 26-ஆம் தேதி நள்ளிரவில், வீட்டின் பின்புற வழியாக நுழைந்த அவன், கொட்டகையில் இருந்த கோடரியை எடுத்து வந்து வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த தந்தை ரகுவீர் சஹ்னியை வெட்டிக் கொலை செய்தார். கொலை செய்த உடனேயே, அதே இரவில் கிராமத்தை விட்டு வெளியேறி படோரி இரயில் நிலையம் சென்று, மீண்டும் இரயிலில் சூரத்திற்குத் தப்பிச் சென்றார்.
போலீசாரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக, பயணம் முழுவதும் சிவ சங்கர் தனது மொபைல் போனை அணைத்து வைத்திருந்தார். ஆனால், படோரி இரயில் நிலையத்தை அடைந்தபோது மனைவியிடம் பேசுவதற்காகச் சிறிது நேரம் மொபைலை ஆன் செய்துவிட்டு உடனடியாக மீண்டும் அணைத்துள்ளார். இந்த ஒரு சிறிய தவறே காவல்துறையின் விசாரணைக்கு முக்கியத் தடயமாக மாறியது. தொழில்நுட்ப விசாரணையில் கொலை நடந்த இரவில் அவரது மொபைல் லொகேஷன் படோரி இரயில் நிலையத்தின் அருகில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தந்தை இறந்த பிறகும் இறுதிச் சடங்குகளுக்குச் சிவ சங்கர் வராததால் சந்தேகம் வலுத்து, சூரத் சென்ற காவல் துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
