CRIME
“கேமராவை ஆஃப் பண்ணாங்க.. ஆனா.. ” தொழிலதிபரை மிரட்டி ரூ.1 கோடி பறிக்க முயன்ற ‘நைஸ்’ கும்பல்.. இறுதியில் நடந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. மும்பையில் அம்பலமான ‘Special 26’ பட பாணி கொள்ளை..!!
மும்பையின் அந்தேரி கிழக்குப் பகுதியில் உள்ள மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவனத்திற்குள், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு நுழைந்த ஒன்பது பேர் கொண்ட போலி கும்பல், தொழிலதிபர் ராஜ்குமார் கந்தசாமியை மிரட்டி ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தைப் பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அலுவலகத்திற்குள் புகுந்த அந்தக் கும்பல் ஊழியர்களின் செல்போன்களைப் பறித்துவிட்டு கண்காணிப்பு கேமராக்களையும் அணைத்துச் சோதனை நடத்துவது போல நாடகமாடியுள்ளது. ஆனால், கேமராக்களை அணைத்தவர்கள் அதன் பதிவுகளைச் சேமிக்கும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை அணைக்க மறந்துவிட்டதால், அவர்களின் ஒட்டுமொத்த ஆள்மாறாட்டச் சதியும் சிசிடிவி ஆதாரமாகப் போலீசாரிடம் சிக்கி அம்பலமானது.
தொழிலதிபர் ராஜ்குமார் கந்தசாமியிடம் நிதி முறைகேடு புகார்களைக் கூறி, சிறையிலடைப்போம் என மிரட்டியபோதும் அவர் பயப்படாமல் முறையான வரி ஆவணங்களை வைத்திருந்ததால் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். சோதனை என்ற பெயரில் எதையும் பறிமுதல் செய்யாமல் அந்தக் கும்பல் அவசரமாக வெளியேறியதால் சந்தேகமடைந்த அவர், மறுநாள் தனது ஆடிட்டருடன் வருமான வரித்துறை அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தபோதுதான் தனக்கு நடந்தது போலி ரெய்டு என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
போலீசாரின் விசாரணையில், இந்த ஒட்டுமொத்த சதித் திட்டத்திற்கும் ராஜ்குமாரிடம் 6 ஆண்டுகள் பணியாற்றி கடந்த ஜூன் மாதம் வேலையிலிருந்து நீக்கப்பட்ட அவரது முன்னாள் ஓட்டுநர் சந்தோஷ் கபட்கர் தான் முக்கியக் காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. மீண்டும் வேலை தராததால் ஏற்பட்ட பழிவாங்கும் எண்ணத்தில், அவர் வருமான வரித்துறையில் பணிபுரியும் சில ஊழியர்களைத் தொடர்புகொண்டு இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். இந்த வழக்கில் ஆள்மாறாட்டம், கடத்தல் மற்றும் பணம் பறிக்க முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் செப்டம்பர் 4ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முன்னாள் ஓட்டுநர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
