CRIME
“என்னிடம் பணம் வாங்கிட்டு ஏன் கைது செய்றீங்க..?” 14 மணி நேர விசாரணை… 200 கேள்விகள்…. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் விட்டு கதறிய ‘ஜெம்’ வீரமணி..!!
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகிப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி மீது, இதுவரை 10 சிறுமிகள் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர். ரகசிய விசாரணை மூலம் இவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வீரமணி மீது 6 போக்சோ வழக்குகள் உட்பட மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கும் அடங்கும். கைதாகும் விபரம் தெரியாமல் காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வரப்பட்ட வீரமணி, தான் கைது செய்யப்பட்டதை அறிந்து, “என்னிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இப்போது கைது செய்வது ஏன்?” என்று காரை விட்டு இறங்க மறுத்துக் கதறி அழுதுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரகசிய டைரியின் அடிப்படையில், வழக்குகளை மறைக்க யார் யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
தற்போது இந்த வழக்கைச் சிறப்புப் புலனாய்வுப் படை போலீசார் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். முதல் பிரிவினர் சிறுமிகளுக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்தும், இரண்டாவது பிரிவினர் முந்தைய காலகட்டத்தில் வீரமணி மீதான வழக்குகளை முறையாக விசாரிக்காமல் நீதிமன்றத்தில் முடித்து வைத்த அதிகாரிகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். மூன்றாவது பிரிவினர், வீரமணி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க சுமார் 120 கோடி ரூபாய் வரை லஞ்சப் பணம் கைமாறியதா என்பது குறித்தும், குறிப்பிட்ட ஒரு நகைக்கடையில் வீரமணி பெயரில் வாங்கப்பட்ட தங்கக்கட்டிகள் யாருக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறித்தும் மிகத் தீவிரமான விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையில், தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரிக்க, நீதிமன்ற அனுமதியோடு புழல் சிறையிலேயே வைத்து வீரமணியிடம் உதவி ஆணையர் காயத்ரி தலைமையிலான போலீசார் 2 நாட்களாக மொத்தம் 14 மணி நேரம் மறுவிசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அவரிடம் 200-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும், இதுவரை விசாரிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சாட்சிகள் அளித்த விபரங்கள் குறித்தும் அவரிடம் சரிபார்க்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தேவையற்ற வதந்திகளையோ அல்லது கருத்துகளையோ யாரும் வெளியிட வேண்டாம் என்று சிறப்புப் புலனாய்வுப் படை போலீசார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
