CRIME
அடக்கொடுமையே அடுத்த ஸ்டாப்பிற்கு முந்தும் வேகப் போட்டி.. ஆட்டோவை நசுக்கிய தனியார் பேருந்தின் வெறித்தனம்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி..!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி-செர்புளச்சேரி சாலையில் உள்ள மருதூர் வளைவில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டது. வல்லப்புழா பகுதியிலிருந்து பட்டாம்பி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது பலமாக மோதியது. வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் முன்கூட்டியே தெரியாது என்பதால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
குறுகலான சாலைகளில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள், அடுத்த பேருந்து நிறுத்தத்திற்கு முன்கூட்டியே சென்று பயணிகளை ஏற்றுவதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக இயக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த விபத்தும் அதுபோன்ற ஒரு வேகப் போட்டியின் காரணமாகவோ அல்லது வளைவில் வேகத்தைக் குறைக்காததாலோ ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாகன ஓட்டிகள் இதுபோன்ற ஆபத்தான வளைவுகளில் திரும்புவதற்கு முன்பாகவே தங்களது வேகத்தைக் குறைக்க வேண்டுமே தவிர, வளைவுக்குள் சென்ற பிறகு வேகத்தைக் குறைக்க முயலக் கூடாது என்ற விழிப்புணர்வையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
