LATEST NEWS
அறிவாலயத்தில் குவியும் சூட்கேஸ் புகார்கள்.. சீனியர்களை தூக்க ஸ்டாலின் அதிரடி பிளான்… தவெக பக்கம் தாவும் நிர்வாகிகள்..? திமுகவில் வெடிக்கும் கலகம்..!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவில் உட்கட்சி ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அக்கட்சியின் தலைமை தயாராகி வருகிறது. தேர்தலில் ஏற்பட்ட வரலாற்றுத் தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட குழுவினர், ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று வந்தனர். அப்போது, அறிவாலயத்திற்கு ஆன்லைன் மற்றும் கடிதங்கள் மூலமாக சூட்கேஸ் சூட்கேஸாக லட்சக்கணக்கில் புகார்கள் குவிந்தன. குறிப்பாக, தேர்தலில் கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்களைக் களையெடுக்க வேண்டும் என உடன்பிறப்புகள் கொந்தளித்து வருகின்றனர்.
கட்சியினரின் கோரிக்கையின்படி, தேர்தல் வேலை செய்யாதவர்களை நீக்கிவிட்டு, செயற்குழு தீர்மானங்களின்படி நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒன்றியம், வட்டம், மாவட்டம் எனப் படிப்படியாகத் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். இருப்பினும், சீனியர்களை ஓரம் கட்டிவிட்டு இளைஞர்களை மட்டுமே கொண்டு வந்தால், கட்சிக்குள் கோஷ்டி பூசல்களும் சீனியர் – ஜூனியர் மோதல்களும் வெடிக்கும் என்ற பெரிய சிக்கலும் இதில் காத்திருக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியில் இல்லாததால், தற்போது கடுமையான தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் நிர்வாகிகளின் பதவிகளில் கைவைத்தால் அவர்கள் அதிருப்தியடைய வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில், அதிருப்தி நிர்வாகிகள் தற்போது ஆளுங்கட்சியாக மாறியுள்ள தவெக பக்கமோ அல்லது பிற கட்சிகளுக்கோ தாவிவிடக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்த சவால்களைத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வாறு லாவகமாகக் கையாண்டு கட்சியைச் சீரமைக்கப் போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
