LATEST NEWS
நாதக கார்த்திகா நள்ளிரவு கைது.. சீமானை வெளுத்த அமைச்சர் வன்னி அரசு – தலித் பெண் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடா..? விசிகவை வாரும் நெட்டிசன்கள்..!!!
தமிழ்நாடு சமூக நீதி அமைச்சர் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா நள்ளிரவில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய இரண்டையும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கார்த்திகா கைதைக் கண்டித்த அரசியல் தலைவர்களுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்திருந்த நிலையில், “திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை” என அமைச்சர் சாடியுள்ளார். சீமான் கடந்த காலங்களில் திமுக தலைவர் கலைஞரை மிகக் கேவலமாகப் பேசியதை திமுக மறந்திருக்கலாம், ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பார்ப்பனிய அடிமைகளை ஒருபோதும் ஏற்காது என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தவெக வேட்பாளர் சத்தியபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்ததாகக் கூறி, அவருக்கு ஆதரவாக அமைச்சர் வன்னி அரசு மிகத் தீவிரமாகப் பேசினார். “ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் பெண்கள், அதிலும் தலித் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது” என்று அப்போது மு.க.ஸ்டாலினைக் கண்டித்த வன்னி அரசு, தற்போது அதே தலித் சமூகத்தைச் சேர்ந்த நாதக வேட்பாளர் கார்த்திகா நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த உடையில் கைது செய்யப்பட்டதற்கு எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
தலித் பெண் உரிமை மற்றும் சமூக நீதி பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடமிருந்து கார்த்திகா கைதைக் கண்டித்து எந்தவொரு அறிக்கையும் வராதது, அதிகாரத்திற்காக அமைச்சர் வன்னி அரசு எடுத்துள்ள இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயம், கடந்த காலங்களில் தவெக தலைவர் விஜய்யை விசிக தலைவர் திருமாவளவனும் அமைச்சர் வன்னி அரசும் கடுமையாக விமர்சித்த பழைய வீடியோக்களைப் பகிர்ந்து, நாதகவினர் தற்போது இணையத்தில் அமைச்சருக்கு எதிராகக் கடுமையான விமர்சனத் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.
